தமிழ்நாட்டிலும் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறி இறப்பவர்கள் அதிகமாக உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தாலுகா மருத்துவமனைகளில் கரோனா கவனிப்பு மையங்கள் கூட சரிவர செயல்படாத நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதிலும் அதிகமானோர் மூச்சுத்திணறலோடு வருவதால் ஆக்ஸிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு நோயாளிகள் மூச்சு திணறலோடு பல மணி நேரம் காத்திருந்து படுக்கைக்கு அழைத்துச் செல்லப்படும் நிலை உருவாகி உள்ளது.
மற்றொரு பக்கம் கரோனா பரிசோதனை மற்றும் சி.டி ஸ்கேன் ரிப்போர்ட்கள் கிடைக்க ரொம்பவே தாமதம் ஏற்படுவதால் சிகிச்சைக்கும் தாமதம் ஏற்படுகிறது. ரிப்போர்ட் கிடைக்காமலேயே பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் பாதையின் மாவட்ட குருதிக்கொடை பொறுப்பாளர் முள்ளூர் ஞானபாண்டியன் (34), சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பரிசோதனைகளும் எடுக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு துடிதுடித்து இறந்துள்ளார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து பெட்டில் சிகிச்சை பெற்ற பெண்ணுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டிருந்தது.
சரியான சிகிச்சையின்றி ஞானபாண்டியன் இறந்துவிட்டதாக உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பிறகே அவருக்கான கரோனா பரிசோதனை முடிவு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் சடலம் உறவினர்களிடம் கொடுக்ககப்படாமல் போஸ்கநர் மின்மயானத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஞானபாண்டியன் உறவினர்கள் கூறும் போது, ஞானபாண்டியன் மருத்துவக்கல்லூரி அருகிலேயே இருப்பதால் மக்கள் பாதை குருதிகொடை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்து பல நூறு உயிர்களை காப்பாற்றி இருக்கிறார். ஆனால் தனக்கும் ரத்தம் குறைந்துவிட்டதாக அவரே தொடர்பு கொண்டு ரத்தம் கேட்டார். ஆனால் ரத்தம் தேவையில்லை என்று மருத்துவர்கள் சொன்னார்கள். இன்று சரியான கவனிப்பு இல்லை, ஆக்ஸிஜன் போதவில்லை. பரிசோதனை முடிவுகள் வராததால் சிகிச்சை அளிக்க தாமதம் என்கிறார்கள்.
பாண்டியன் மூச்சுத் திணறி இறந்த பிறகு உறவினர்கள் போராட்டம் நடத்திய பிறகு தான் கரோனா பாசிட்டிவ் என்கிறார்கள். இவ்வளவு கால தாமதமும் அலட்சியமும் பல உயிர்களை பலிவாங்கிவிடும் போல் உள்ளது. புதிய அரசு உடனே கரோனா நோயாளிகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.
மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது, வரும் அனைத்து நோயாளிகளும் மூச்சுத்திணறலோடு வருகிறார்கள். இருக்கின்ற ஆக்சிஜனை தான் அவர்களுக்கு வழங்க முடிகிறது. இன்னும் கூடுதலாக அதாவது ஒரு நாளைக்கு குறைந்தது 8000 கி தேவைப்படுகிறது. அதேபோல கண்காணிப்பு மீட்டரும் தேவை அதிகமாக உள்ளது. மருத்துவப்பணியாளர்களின் பற்றாக்குறையும் அதிகமாக உள்ளது என்றனர்.