இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.
இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பு ஊசி மருந்தை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் நேற்று (22/04/2021) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், "உற்பத்தி செய்யப்படும் மருந்தில் 50% மத்திய அரசுக்கும், மீதமுள்ள 50% மாநில அரசுகளுக்கும் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படும். ஒரு டோஸ் கோவிஷீல்டு மாநில அரசுக்கு ரூபாய் 400- க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூபாய் 600- க்கும் வழங்கப்படும்" எனத் தெரிவித்திருந்தது. இது மாநில அரசுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அலட்சியக் கிருமித் தாக்குதலாலும் இந்தியா அல்லாடிக்கொண்டிருக்கிறது. மத்திய அரசின் நிலைப்பாட்டால், தடுப்பூசிகளின் விலை திடுமென உயர்ந்திருக்கிறது.மக்களைக் காப்பது அரசின் பொறுப்பு என நீதிமன்றம் இடித்துச்சொல்லும் நிலைமை பெருமைக்குரியது அல்ல.
— Kamal Haasan (@ikamalhaasan) April 22, 2021
அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், "அலட்சியக் கிருமித் தாக்குதலாலும் இந்தியா அல்லாடிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் நிலைப்பாட்டால், தடுப்பூசிகளின் விலை திடுமென உயர்ந்திருக்கிறது. மக்களைக் காப்பது அரசின் பொறுப்பு என நீதிமன்றம் இடித்துச்சொல்லும் நிலைமை பெருமைக்குரியது அல்ல" என்று குறிப்பிட்டுள்ளார்.
'பூமியை மீட்போம்' என்கிற கோஷத்தோடு உலக பூமி நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. இயற்கையைச் சிதைத்தால் விளைவு என்னவாக இருக்கும் என்பதை இக்காலம் 'மாதிரி' காட்டிக்கொண்டிருக்கிறது. தாங்க மாட்டீர்கள் ஜகத்தீரே… இயற்கையைப் பேணி அதன் கொடையால் நாமும் வாழ்வோம்.
— Kamal Haasan (@ikamalhaasan) April 22, 2021
மற்றொரு ட்விட்டர் பதிவில், "'பூமியை மீட்போம்' என்கிற கோஷத்தோடு உலக பூமி நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. இயற்கையைச் சிதைத்தால் விளைவு என்னவாக இருக்கும் என்பதை இக்காலம் 'மாதிரி' காட்டிக்கொண்டிருக்கிறது. தாங்க மாட்டீர்கள் ஜகத்தீரே… இயற்கையைப் பேணி அதன் கொடையால் நாமும் வாழ்வோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.