தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் கண்ணன். அவரது மனைவி சுமதி, மற்றும் அவரது மகள் அனுபிரேமா (15). அனுபிரேமா பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். 8ம் வகுப்பு படிக்கும் போது முதல் கட்டுரைப் போட்டிகளில் அதிகமாக பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார்.
2017 ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதலமைச்சரிடம் பரிசும், பதக்கமும் பெற்றார். இப்படி பல கட்டுரைப் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் முத்துப்பேட்டையில் தமிழ் தாத்தா உ.வே.சா இலக்கிய மன்றம் சார்பில் நடந்த கட்டுரைப் போட்டியில் பேரிடருக்குப் பின் அரசு செய்ய வேண்டிய உடனடி நிவாரணம் என்ற தலைப்பில் கட்டுரை எழுதி முதல் பரிசை பெற்றார். அந்த மாணவிக்கு ரூபாய் 3 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது.
இந்தப் பணத்தை அப்படியே புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் 100 நாட்களைக் கடந்தும் நீர் நிலைகளை சீரமைத்து வரும் இளைஞர்களிடம் கொடுத்து, குளங்களை சீரமைக்க இந்த பணத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு இளைஞர் குழுவை கேட்டுக்கொண்டார். மாணவியிடம் பணத்தைப் பெற்றுக் கொண்ட இளைஞர் மன்றத்தினர் மாணவியை பாராட்டினார்கள்.
இது குறித்து மாணவி அனுபிரேமா கூறும் போது, கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்பதில் அதிக ஆர்வம் உண்டு. பங்கேற்ற போட்டிகளில் பரிசு வாங்கி வருவேன். இந்த நிலையில் தான் கடைசியாக நடந்த கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு ரூபாய் 3 ஆயிரம் கிடைத்தது.
அந்த பரிசுத்தொகையை பயனுள்ள வகையில் செலவு செய்ய வேண்டும் என்பதால் அடுத்த தலைமுறைக்காக தண்ணீரை சேமிக்க, குளங்களை சீரமைத்து வரும் கொத்தமங்கலம் இளைஞர்களிடம் கொடுத்தேன். என்னால் இயன்ற சிறிய உதவியாக என் பரிசு தொகையை கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு வரும் இதேபோல் நீர்நிலைகளை பாதுகாக்க தங்களால் இயன்றதை செய்தால் அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் கிடைக்கும் என்றார்.