மதுராந்தகம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் நிலையில், பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், ஏரி முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
மதுராந்தகம் ஏரிக்கு வரும் மழைநீர் உபரி நீராக கலிங்கல் மூலம் கிளியாற்றில் வெளியேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுராந்தகம் ஏரியைச் சுற்றியுள்ள கத்திலிச்சேரி, விழுதமங்கலம், வளர்பிறை, முள்ளி, முன்னுத்திக்குப்பம், நீலமங்கலம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், முருக்கஞ்சேரி, குன்னத்தூர், கருங்குழி, இருசமநல்லூர், பூதூர், ஈசூர் கிராம மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.