மதுரையில் இன்று காலை ரவுடி ஒருவரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையால் சுடப்பட்டவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ளது செண்பகத்தோட்டம். இங்கு உள்ள மீனவர் சங்க கட்டிடம் அருகே ஒரு பெண்ணை இன்று அதிகாலை அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி குருவி விஜய் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது அந்தப் பெண் கூச்சலிட்டு உள்ளார்.
அப்போது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவசர உதவி எண்ணான 100க்கு போன் செய்ததால் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றுள்ளனர். போலீசாரை பார்த்ததும் குருவி விஜய் மற்றும் அவரது கூட்டாளிகள் போலீசாரை தாக்க முயன்றுள்ளனர். அச்சமயம் போலீசார் சுட்டதில் ரவுடி குருவி விஜய்க்கு காலில் காயம் ஏற்பட்டது. ரவுடி குருவி விஜய் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடித்து போலீசார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். காலில் காயம்பட்ட நிலையில் ரவுடி குருவி விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். பிடிப்பட்ட ரவுடியின் கூட்டாளிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுடப்பட்ட குருவி விஜயனின் அம்மா கண்ணகி, அவரது சகோதரி லாவண்யா ஆகியோர் கதறியபடி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட வந்தனர். பின்னர் நம்மிடம் அவர்கள் கூறியதாவது; ‘இரவு 11.30 மணிக்குவந்த போது என் மகனை வழிபறி விஷயமாக விசாரிக்க வேண்டும் என்று அழைத்து சென்றார்கள். நானும் என் மகள் லாவண்யாவும் கூடவே அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு சென்றாம். எங்களை இரவு 12 .30 மணிக்கு வீட்டிற்க்கு போங்க உங்க மகனை விசாரித்து விட்டு அனுப்பிவிடுவோம் என்று சொன்னதால் நம்பி வீட்டிற்க்கு வந்தோம். பின்பு இரவு 2 மணிபோல் வீட்டின் முன்பு காவல் ஜீப் வந்த சத்தம் கேட்டு மாடியிலிருந்து பார்த்தோம். அப்போது என் மகனோட இன்னொரு பையனையும் இழுத்து வந்தார்கள். அய்யய்யோ என்று கத்திகொண்டே கீழே வந்தேன். அதற்குள் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. நான் கதவை திறந்து வெளியே வருவதற்குள் இரத்தம் சொட்ட சொட்ட என் மகனை தூக்கி போலீஸ் ஜீப்பில் போட்டார்கள். நான் கத்தி கொண்டு ஓடி வருவதை தடுத்து நிறுத்தி என்னை தள்ளி விட்டு ஜீப் பறந்தது. பின்னாலேயே ஓடி அண்ணா நகர் காவல் நிலையத்திற்க்கு சென்றோம். அங்கு யாரும் இல்லை எங்களை வெளியே போ என்று அனுப்பினார்கள். வேறு வழியின்றி கலெக்டர் அய்யாவை பார்த்து காப்பாற்றும்படி சொல்ல வந்தோம்’ என்று அழுதபடி சொல்ல அதற்குள் போலீஸ் வந்து அந்த குடும்பத்தை வெளியேற்றினார்கள்.
இது குறித்து அண்ணா நகர் காவல் நிலைத்தை தொடர்பு கொண்டோம் அங்கிருந்த காவலர், “சார் இங்கு இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் இருவரையும் அந்த ரவுடி கல்லால் தாக்கியதால் அடிபட்டு மதுரை அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெறுகிறார்கள். அந்த ரவுடியும் அங்கு தான் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளார்” என்று தகவல் சொன்னார். அதிகாலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் மதுரை அண்ணாநகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், ரவுடி குருவி விஜயின் சகோதரி லாவண்யா, தனது சகோதரன் சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.