ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப் பள்ளியில் பணியாற்றும் 3 பெண் ஆசிரியைகளுக்கு பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 7 பேர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இவர்கள் 7 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக பாலியல் துன்புறுத்தல், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 9 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதில் குற்றம் சாட்டப்பட்ட 3 ஆசிரியர்கள், பாதிக்கபட்ட 3 பெண் ஆசிரியைகளின் மொபைல் போன்களை பிடுங்கி வைத்துக்கொண்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது போனில் இருந்து தனிப்பட்ட தகவல்களையும் எடுத்துகொண்டதாகவும், இதனைக் காரணமாக வைத்து தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்ததாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியைகளுக்கு சக ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.