புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வருகின்ற 20 ஆம் தேதி நடக்கும் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் கணேஷ், மாவட்ட எஸ்பி செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் அதிமுகவினர் இருந்தனர்.
இந்த ஜல்லிக்கட்டில் தனது புதிய காளையை களமிறக்கவும் எண்ணியுள்ளார். இந்த நிலையில் வாடிவாசல்கள் சரியாக அமைக்கப்பட்டுள்ளதா? நீண்ட தூரம் காளை ஒற்றைப்பாதையில் வேகமாக ஓடி களமிறங்கும் போது விபத்துகள் நேராமல் கவனமாக வாடிவாசல் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினார்.
கடந்த ஆண்டு அவரது செல்லக்காளை கொம்பன் வாடிவாசலில் நீண்ட நேரம் வேகமாக சென்ற போது தடுப்பு கல்லில் இடித்து மரணமடைந்ததால் இந்த எச்சரிக்கை ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் விராலிமலை ஜல்லிக்கட்டில் கடந்த ஆண்டைவிட அதிகமான காளைகளும் காளையர்களை களமிறக்கி சாதனையாக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். அதாவது சுமார் 2500 காளைகளை களமிறக்க திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.
வாடிவாசல் ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக முதல்வர் மக்களுக்கான அரசை நடத்தி வருகிறார். அவரது வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வளர்ச்சியைப் பொறுக்க முடியாத ஸ்டாலின் போன்ற எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்கள் முதல்வர் மீது மறைமுகமாக சிலரை தூண்டிவிட்டு பொய் குற்றச்சாட்டுகளை கூறி ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். முதல்வர் இவர்களது குற்றச்சாட்டுகளை முறியடிப்பார். இவர்களின் குற்றச்சாட்டு மக்கள் மன்றத்தில் ஒரு போதும் எடுபடாது. அதிமுக அழகிய தோகை விரித்தாடும் ஆண்மையில், வான்கோழியை போன்ற சிலர் தோகை விரித்து ஆட நினைத்தால் வேடிக்கையாக தான் இருக்கும். வான்கோழி ஒரு போதும் ஆண் மயிலாக முடியாது என்று அவர் கூறினார்.