ஐந்து மாத கரோனா ஊரடங்கிற்கு பின் இன்று முதல் வழிபாட்டுதலங்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் உலக பிரசிதபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.
கரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களுக்கு காய்ச்சல் பரிசோதனைக்கு பின்பாகவே அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.
கோவிலுக்குள் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினரும், கோவில் பணியாளர்களும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். பக்தர்கள் தரிசனத்திற்கு காலை 6மணி முதல் 12.30 மணி வரையும் மாலை 4 முதல் இரவு 8மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
கோவிலுக்கு செல்ல அம்மன்சன்னதி கிழக்கு கோபுரம் வழியாக மட்டுமே அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். கோவிலில் கட்டண தரிசனமோ, சிறப்பு தரிசன அனுமதியோ கிடையாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
60வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், 10வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் , கள்ளழகர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும், தேவாலயங்களும், பள்ளிவாசல்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஐந்து மாதங்களுக்கு பின் சுவாமியை தரிசனம் செய்தது சொல்ல முடியாத மகிழ்ச்சி அளித்துள்ளதாக பக்தர்கள் தெரிவித்துவருகின்றனர்.