தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும், கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோருடன் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, ஆண்டுதோறும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா இந்த ஆண்டும் எளிமையாக நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளான இன்று (24/04/2021) மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஒன்றரை டன் எடை கொண்ட வண்ண மலர்களால் மணமேடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த திருக்கல்யாணத்தை சிவாச்சாரியார்கள் மட்டுமே நடத்தினர். பொதுமக்கள் வீட்டிலிருந்தே திருக்கல்யாணத்தைக் காணும் வகையில், யூ-டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
கரோனா பரவல் காரணமாக, வரலாற்றில் இரண்டாவது முறையாக பக்தர்களின்றி மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.