மதுரையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ''மதுரை என்றாலே எப்பொழுதும் மகிழ்ச்சிதான்... அன்புதான்... பாசம்தான்.. ஒரு மாதத்திற்கு முன்பு இதே மதுரைக்கு வருகை தந்து, உள்ளாட்சித் தேர்தலுக்காக முதல்வரால் உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட நமது வேட்பாளர்களை ஆதரித்து இதே மதுரை மாவட்டத்தில் இதே இடத்தில் பிரச்சாரத்தைச் செய்தேன். இன்னும் பெருமையாகச் சொல்ல வேண்டுமென்றால் இளைஞரணி செயலாளராகப் பொறுப்பு ஏற்பதற்கு முன்பே மூர்த்தி குறிப்பிட்டதுபோல, 2017 ஆம் ஆண்டு இதே மதுரை மாநகரில் வருகைதந்து மிகப்பெரிய விழா, கழக மூத்த நிர்வாகிகளுக்கு, முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்குகின்ற அந்த நிகழ்ச்சியை முதன்முதலாக என்னை வைத்து இந்த மதுரை மாநகரில் நடத்தினார்கள். அதன் பிறகுதான் இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்றேன்.
2019ல் மிகப்பெரிய வெற்றியைத் தமிழக மக்கள் கொடுத்தார்கள். தொடர்ச்சியாக நம் தலைவருக்கு மூன்று வெற்றி. பாராளுமன்ற தேர்தல் வெற்றி, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி, இப்போது உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளோம். தமிழக முதல்வரின் 10 மாத கால சிறந்த ஆட்சிக்கு தமிழக மக்கள் கொடுத்திருக்கும் அங்கீகாரம் இந்த உள்ளாட்சித் தேர்தல் வெற்றி. பேரரசனுடைய சிலையைக் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பே திறப்பதாக இருந்தது. ஆனால் கரோனா காரணமாக அப்பொழுது ஊரடங்கு இருந்தது. அதனால் அப்பொழுது திறக்காமல் இப்பொழுது திறந்து இருக்கிறோம்'' என்றார்.