மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பேராசிரியைக்கு கத்திக்குத்து
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியை ஜெனிபாவை கத்தியால் குத்தி தாக்கப்பட்டார்.
மதுரைக் காமராஜர் பலகலைக் கழகத்தில், இதழியல் துறை துறைத்தலைவராக ஜெனிஃபா பணியாற்றி வருகிறார். இன்று காலை வழக்கம்போல் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள தனது அறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், பேராசியர் ஜெனிஃபாவின் கழுத்து, முதுகு, ஆகிய இடங்களில் சராமரியாகக் குத்தினார்.
இதில் படுகாயமடைந்த ஜெனிஃபா, ரத்தவெள்ளத்தில் அங்கேயே மயக்கமடைந்தார். கத்தியால் தாக்கிய அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார். இதனால் அதிர்ச்சியடைந்த சக பேராசியர்கள் ஜெனிஃபாவை மீட்டு, மதுரை வடமலையான் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தப்பியோடிய நபரை அருகிலிருந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மடக்கிப் பிடித்து நாகமலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஜெனிஃபாவைக் கொலை செய்ய முயன்றது மதுரையைச் சேர்ந்த ஜோதிமுருகன் என்பதும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் கவுரவ விரிவுரையாளராக அவர் முன்னர் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. கொலை முயற்சிக்கான காரணம் குறித்து ஜோதிமுருகனிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.