மதுரை உசிலம்பட்டி செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கவுன்சிலருக்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் அரவிந்த், சுவர் ஏறி குதித்து ஓடிய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
செல்லம்பட்டி ஊராட்சியில் அதிமுக 9 இடங்களிலும், திமுக 6 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளது. இந்நிலையில் சேர்மன் பதவிக்கு அதிமுக தரப்பில் ராஜாவும், திமுக தரப்பில் ஒன்றிய செயலாளர் சுதாகரனும் களத்தில் இருக்கிறார்கள். இதில் சுயேட்சையாக போட்டியிட்ட அரவிந்த் வெற்றி பெற்றுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று (06.01.2020) பதவியேற்றுக்கொண்டனர். அப்போது திமுக, அதிமுக தரப்பினர் ஆட்களைப் பிடிக்கும் வேலையில் மும்முரமாக இறங்கினர். ஆளும் கட்சியில் உள்ள சில வெற்றி பெற்றவர்களை திமுக தன்வசம் இழுக்க பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அதிமுகவில் உள்ள இருவர் திமுக பக்கம் வர சில நிபந்தனைகளை விதித்தனர். அதில் முக்கியமான நிபந்தனை சுயேச்சை வேட்பாளர் அரவிந்தை திமுக பக்கம் இழுத்தால் நாங்கள் திமுகவிற்கு வாக்களிக்க தயார் என்று கூறியதாக தகவல் கூறுகின்றன. இதற்கிடையில் பதவியேற்பு நாள் அன்று அரவிந்தை மடக்கிபோட காத்திருந்த நேரத்தில் பின் பக்க வழியே சுவர் ஏறி குதித்து தப்பியது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.