இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது தினசரி 4 லட்சம் பேருக்கு கரோனா உறுதியான நிலையில், தற்போது நாட்டின் தினசரி கரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்தநிலையில் நேற்று (02.12.2021) செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், நாட்டின் 18 மாவட்டங்களில் வாராந்திர கரோனா உறுதியாகும் சதவீதம் 5 முதல் 10 ஆக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் கரோனா, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்தியாவிலும் கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எல்லோரும் முகவசமும், தடுப்பூசியும் செலுத்திக்கொண்டால் ஊரடங்கு போடுவதற்கான அவசியம் இருக்காது எனத் தெரிவித்திருந்தார். கிருஷ்ணகிரியில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் மதுரையில் கரோனா தடுப்பூசி போடாதவர்கள் 18 பொது இடங்களுக்கு வர அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ரேஷன் கடை, வியாபார நிறுவனங்கள், தியேட்டர், கடைவீதி, வங்கி உள்ளிட்ட 18 இடங்களில் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மதுரை மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் கூறியிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் முதல் டோஸ் 71 சதவீதம் பேரும், இரண்டாம் டோஸ் 32 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர்.