Farmer's wife passes away near salem thalaivasal; Police investigation!

தலைவாசல் அருகே, கணவரை பிரிந்து தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த விவசாயியின் மனைவி மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் வேப்பணம்பூண்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் அழகுவேல் (51). விவசாயி. இவருடைய முதல் மனைவி சித்ரா (45). இவர்களுக்கு ஆகாஷ், அனீஷ் என இரு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன், மனைவி இருவரும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து விட்டனர்.

Advertisment

இதையடுத்து அழகுவேலுக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள வீட்டில் சித்ரா வசித்து வந்தார். இதற்கிடையே, கெங்கவல்லி காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலர் ஒருவரை அழகுவேல், இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 9 வயதில் ஆண் குழந்தை உள்ளது. முதல் திருமணத்தை மறைத்து, தன்னை இரண்டாவதாக திருமணம் செய்ததை அறிந்த பெண் காவலர், கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு அழகுவேலை விட்டு பிரிந்து சென்று பெற்றோருடன் வசிக்கிறார்.

இந்நிலையில், அழகுவேலின் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த சித்ரா, மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக அக். 14ம் தேதி தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வீரகனூர் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடத்தில் சென்று விசாரணை நடத்தினர். சித்ராவின் உடலில் சில இடங்களில் பலத்த காயங்கள் இருந்தன. சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சித்ராவின் வீடு அருகே, தனியார் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கும் சித்ராவுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருந்து வந்துள்ளதாகவும் இதில் ஏற்பட்ட தகராறில் அவர் கொல்லப்பட்டாரா? என்ற சந்தேகத்தின்பேரில் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரிடம் விசாரித்து வருகின்றனர்.

சித்ராவின் செல்போனுக்கு வந்த அழைப்புகள், சென்ற அழைப்புகளின் விவரங்களை சேகரித்தும் விசாரணை நடந்து வருகிறது. அவரை கடைசியாக சந்தித்தவர்கள், அக்கம்பக்கத்தினர் ஆகியோரிடமும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்தபோது மகன்கள் இருவரும் எங்கே சென்றனர் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.