அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு திருச்சி மாவட்டம் திருவளர்சோலையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தினாலும், சிபிஐ வரை விசாரித்தும் கொலையாளிகளைப் பிடிக்க முடியாமல் விசாரணை நீண்டு வருகிறது. இந்த நிலையில், மீண்டும் திமுக ஆட்சி வந்ததும் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
குற்ற வழக்கு விசாரணைகளில் கைதேர்ந்த டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் போன்ற போலீசார் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் பங்கேற்றனர். பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு சம்பவம் நடந்த நாளில்; சம்பவம் நடந்த பகுதியில் இயங்கிய செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டு அவர்களில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்தவர்களை விசாரணைக்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இறுதியாக 12 பேரிடம் உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதனிடையே ராமஜெயத்தின் மற்றொரு சகோதரரான ரவிச்சந்திரன் ராமஜெயம் கொலைத் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பவம் நடந்து 12 ஆண்டுகளுக்கும் மேல் கடந்துவிட்டனர். சிபிஐ, சிஐடி போன்ற அமைப்புகள் விசாரித்து விட்டனர். தற்போது நடந்து வரும் சிறப்புப் புலனாய்வு குழுவின் விசாரணையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? நியாயம் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா? என்று நீதிபதி ஜெயச்சந்திரன் மனுதாரரிடம் கேள்வி எழுப்பினர். சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில் திருப்தி அளிப்பதாகவும், நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம் எனவும் ரவிச்சந்திரன் தெரிவித்தார். அதேசமயம் அரசு தரப்பில் இது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிறப்பு புலனாய்வுக் குழு அனைத்து விசாரணைகளையும் முடித்து விரைவில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்துள்ளார்.