கேரளாவில் அடித்து கொல்லப்பட்ட ஆதிவாசி வாலிபர் மதுவின் சகோதரி கேரள காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.
கேரளாவிலுள்ள அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞரான மது (வயது 32), இவர் உணவு திருடியதாக ஏற்பட்ட சந்தேகத்தால் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி அடித்துக் கொல்லப்பட்டார். விபத்தால் அவருக்கு சற்று மனநலன் பாதிக்கப்பட்டிருந்தது. பசியுடன் இருந்த போதே அவர் அடித்துக் கொல்லப்பட்ட இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, அட்டப்பாடியிலுள்ள மதுவின் இல்லத்துக்கு நேரில் சென்ற கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து ரூ.10 லட்சம் நிதி உதவியும் வழங்கினார். இதனிடையே மதுவின் தங்கை சந்திரிக்கா காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்.
இந்தநிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆதிவாசி கிராமங்களில் உள்ள தகுதியான இளைஞர், இளம்பெண்களுக்கு அரசு வேலை வழங்க பட்டியல் தயாரிக்கும்படி பாலக்காடு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.
இந்தநிலையில் பாலக்காடு மாவட்ட ஆட்சியர் பட்டியலை தயார் செய்தார். அப்போது அதில் சந்திரிக்காவின் பெயர் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து கேரள அரசு சந்திரிகா உள்பட 74 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து, சந்திரிகாவுக்கு பணி நியமன ஆணையை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வழங்கினார்.