தனது சலூனில் உள்ள கத்தி, கத்தரிக்கோல் போன்றவற்றை துடைத்து சுத்தம் செய்து ஆயுதபூஜை செய்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார் நண்பர் குட்டித்துரை. அந்த நேரத்தில் சலூனுக்குள் ‘என்ட்ரி’ ஆனார் கண்ணன். இவர், அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மாவட்ட செயலாளராக இருக்கிறார். நம்மைக் கண்டதும் “சார்.. இதையெல்லாம் எழுதலாம்ல..” என்று கோரிக்கை விடுப்பதுபோல், “எங்கள் தொழிலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் சிலர் விளம்பரம் வெளியிடுவதும் பேட்டி அளிப்பதுமாக இருக்கின்றனர்.” என்றார் ஆதங்கத்துடன்.
சலூன் தொழிலுக்கு என்ன பாதிப்பாம்?
“அழகியல் துறையில் கடந்த 18 வருடங்களாக கோலோச்சுகின்ற அந்த பிரபல நிறுவனம், சேனல்களில் ஒளிபரப்பும் ஹேர் டை ஷாம்பு விளம்பரங்களில் தங்களது தயாரிப்பு குறித்து உயர்வாகப் பேசிவிட்டு “இனிமேல் சலூனுக்குப் போகாதீங்க..” என்று மக்களைக் கேட்டுக்கொள்கிறது.
“நான் ஒரு சினிமாக்காரன் கண்டுபிடிச்சிருக்கேன்..” என்று அந்த ஹேர் கலர் ஷாம்பு குறித்து பெருமிதம்கொள்ளும் அந்த நடிகர், “இனி பெண்கள் யாரும் பியூட்டி பார்லருக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை..” என்கிற ரீதியில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சவால் விடுகிறார்.
அந்த ஹேர் கலர் ஷாம்பு நல்ல கண்டுபிடிப்போ? கெட்ட கண்டுபிடிப்போ? எதுவாகவும் இருந்து தொலையட்டும். சலூனுக்குப் போகாதீங்க! பியூட்டி பார்லருக்குப் போகாதீங்க! இப்படியெல்லாம் விளம்பரம் செய்து நடைமுறையில் உள்ள தொழில்களுக்கு இடையூறு பண்ண வேண்டுமா?
இந்த விளம்பர விவகாரம் குறித்து நாங்கள் (மருத்துவ சமுதாயத்தினர்) மாநில அளவில் கலந்து பேசினோம். இதுபோன்ற விளம்பரங்களை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சலூன்களை திராவிட இயக்கத்தின் தொட்டில்கள் என்று பாராட்டினார்கள். திராவிட இயக்கப் பிரச்சாரம் அதிகமாக நடந்த இடமும் சலூன்கள்தான். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கே வழிவகுத்தவை சலூன்கள் என்றால் மிகையாகாது. காலம் காலமாக மக்கள் சலூன்களைத் தேடி வருகிறார்கள். எங்களுக்கெதிரான அந்த விளம்பரங்கள் குறித்து நாங்களும் மக்களிடம் பேசுவோம். ‘இதெல்லாம் மோசடி விளம்பரம். நம்பி பயன்படுத்தினால் உங்கள் தலைக்குத்தான் ஆபத்து.’ என்று எடுத்துச் சொல்வோம். சேனல் விளம்பரத்தைக் காட்டிலும் நேரடியாக நாங்கள் சொல்வதைத்தான் மக்கள் கேட்பார்கள். சலூன்களையோ, அழகு நிலையங்களையோ, எந்தக் கண்டுபிடிப்பாலும், எந்தக் கொம்பனாலும் முடக்கிவிட முடியாது.” என்றார் குமுறலுடன்.
ஒரு தொழில் இன்னொரு தொழிலை நம் கண்முன்னே விழுங்கி ஏப்பம் விடுகிறது. கூத்து, நாடகம், வானொலி என காலம் புரட்டிப்போட்டவை எத்தனை எத்தனையோ?