கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே இயங்கிவரும் சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பான செய்திகளை நமது நக்கீரனின் தொடர்ந்து விசாரணை செய்து வெளியிட்டுவருகிறோம். அந்த வகையில் நேற்றும் நமது முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் ஆகியோரை பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் சகோதரர் அருண் சுபாஷ் உட்பட 10 பேர் வழிமறித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் தற்போது 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபரும், மூத்த ஊடகவியலாளருமான பிரகாஷ் மற்றும் நக்கீரன் புகைப்பட நிருபர் அஜீத்குமார் ஆகியோர் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பாகச் செய்தி சேகரித்துவிட்டுத் திரும்பும்போது சமூகவிரோதிகளால் தாக்கப்பட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே இயங்கி வரும் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பான செய்திகளை நக்கீரன் செய்தியாளர்கள் செய்தி சேகரிப்பதை எதிர்த்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மாலை, பள்ளியின் வெளிப்புறத்தைப் படம்பிடித்து அங்கிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் போய்க்கொண்டிருந்த போது, ஊடகவியலாளர் பிரகாஷ் மற்றும் புகைப்பட நிருபர் அஜீத் ஆகியோர் சென்ற வாகனத்தைச் சிலர் வழிமறித்துத் தாக்கியுள்ளனர். இதில், அஜீத்தின் சட்டை கிழிக்கப்பட்டும் காரின் கண்ணாடியை உடைத்தும் உள்ளனர். இந்த தாக்குதலிருந்து தப்பித்த நக்கீரன் செய்தியாளர்கள் குழுவை 15 கிலோ மீட்டர் பின்தொடர்ந்து வந்து மீண்டும் தாக்குதல் நடத்தி பிரகாஷ் அவர்களின் மண்டையை உடைத்தும், அஜித்தின் பற்களை உடைத்தும் உள்ளது சமூகவிரோதக் கும்பல்.
இந்த அராஜக செயலில் ஈடுபட்டவர்களில் சிலரை கைது செய்யப்பட்டிருந்தாலும் தாக்குதல் நடத்தியவர்களில் எஞ்சியவர்களை கைது செய்யவும் இவர்களை தூண்டியவர்களையும் கைது செய்து அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.