திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்துள்ள மேல்நாச்சிப்பட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 500க்கும் அதிகமான மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர். சமீபத்தில் காலாண்டு தேர்வு நடந்து முடிந்தது. காலாண்டு விடுமுறை தினத்தில் இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடந்துள்ளது.
கணித ஆசிரியராக உள்ள 48 வயதான கண்ணன், சிறப்பு வகுப்புக்கு வந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரை அழைத்து சென்று, பள்ளி கழிப்பறையில் வைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் அந்த மாணவி சிறப்பு வகுப்புக்கு செல்லாமல் நின்றுள்ளார். விடுமுறை திறந்து பள்ளி திறந்தபின்பும் பள்ளிக்கு செல்லாமல் நிற்க, இதுப்பற்றி பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர். நான் போகமாட்டன் என அடம்பிடித்தவரை சமாதானம் செய்து விசாரித்தபோது, கணித ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்ததை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியான பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று (அக்டோபர் 22ந் தேதி) காலை பள்ளிக்கு வந்து கணித ஆசிரியரை வெளியே வாருங்கள் என அழைத்துள்ளனர்.
எட்டாம் வகுப்பு பாடம் எடுத்துக்கொண்டுயிருந்தவர் வகுப்பை விட்டு வரமாட்டேன் என்றுள்ளார். இதனால் குறிப்பிட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் கண்ணனை தலைமையாசிரியர் அறைக்கு அழைத்து வந்து பேசினர். அந்த அறையை விட்டு வெளியே போக முயன்றவரை இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர். அவர் அதையும் மிறி செல்ல முயல இழுத்துப்போட்டு தாக்கினர். இதில் ஆசிரியரின் மண்டை உடைந்தது.
அதிர்ச்சியான சக ஆசிரியர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் சிலர் கண்ணனை மீட்டு, வேறு அறையில் வைத்து பூட்டி பாதுகாத்தனர். அப்பள்ளிக்கு செங்கம் போலிஸார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் வந்து விசாரணை நடத்திவருகின்றனர்.