ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது, அரசு அலுவலகங்களில் அவரின் புகைப்படங்களை அகற்றக்கோரிய வழக்குகளை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்க அரசு முடிவு செய்தது. இதேபோல, ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னரும் அவரது நினைவாக அரசு திட்டங்களில் அம்மா பெயர் வைக்கப்பட்டது. இவற்றை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றமத்தில் 5 பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் குவித்தவழக்கில், உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவை குற்றவாளி என அறிவித்ததால், அவரது புகைப்படத்தை அரசு அலுவலகத்தில் வைப்பதும், அரசு செலவில் நினைவிடம் அமைப்பதும் சட்ட விரோதமானது என்று சென்னை சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, சி.குமரன், சமூக நீதிப் பேரவை தலைவர் பாமக கே.பாலு ஆகியோர் தரப்பில் ஐந்து வழக்குகள் தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஏ. செல்வம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்ந்த 5 மனுதாரர்கள் தரப்பிலும் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. அதனால் 5 வழக்குகளையும் தள்ளுபடி செய்து ஏப்ரல் 2ஆம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் இந்த உத்தரவை திரும்ப பெற்றுவிட்டு, மனுக்களை மீண்டும் விசாரிக்கக்கோரி 5 பேர் தரப்பிலும் ரீ-ஸ்டோர் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை செவ்வாய்க்கிழமை விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி ஆஷா ஆகியோர் மனுக்களை மீண்டும் விசாரிக்க சம்மதித்தனர். மேலும் வழக்கை ஜூன் 8ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் ஒப்புதல் அளித்துள்ளனர்.