தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை துவங்கி மாநிலம் முழுவதும் கடந்த இரு தினங்களுக்கு முன்புவரை பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வரும் 14ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாக்கும் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 16ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நவ. 14 மற்றும் 15ம் தேதிகளில் கடலோர ஆந்திரம், தென் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 14 மற்றும் 15ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.