ஊரறிய எட்டு வருடங்கள் காதலித்துவிட்டு, ஏன் உயிரைவிட வேண்டும்? என்று, இஎல். ரெட்டியபட்டி மக்கள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.
காதல் ஏன் உயிரைப் பறித்தது?
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ளது இஎல். ரெட்டியபட்டி கிராமம். இங்கு மதனும் மகாலட்சுமியும் பள்ளிப் பருவத்திலிருந்தே காதலித்து வந்தனர். ஒரே ஜாதி என்றாலும் இரு பிரிவாக இருந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்தக் காதலர்கள். பள்ளிப் படிப்பு முடிந்ததும், மதன் சட்டக் கல்லூரியிலும், மகாலட்சுமி ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் சேர்கின்றனர். இந்த நிலையில், மதன் ஏனோ திருமணம் செய்ய மறுத்துவிட, பிரேக் அப் ஆகிறது. ஆனாலும், மகாலட்சுமியின் நினைவு வாட்டிட, இன்று அவள் வீட்டுக்குச் சென்று, உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியிருக்கிறான். மகாலட்சுமியோ, என் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள். நேரத்துக்கு ஒரு பேச்சு பேசும் நீ எனக்கு வேண்டாம் என்றிருக்கிறாள். இதனால் ஆத்திரமடைந்த மதன், மகாலட்சுமியின் வயிற்றில் கத்தியால் குத்தியிருக்கிறான். அப்போது அவள் போராட, இவன் கையிலும் கத்தி கிழித்திருக்கிறது.
கொன்று விட்டோம் என்ற குற்ற உணர்வுடன், அடுத்த தெருவில் உள்ள தன் வீட்டுக்குச் சென்ற மதன், இனி நான் ஏன் வாழ வேண்டும்? என்று மனம் உடைந்து போய், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
குற்றுயிராய்க் கிடந்த மகாலட்சுமியை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற போது, வழியிலேயே இறந்து விட்டாள்.
ஏழாயிரம்பண்ணை போலீசார், இந்தக் கொலை மற்றும் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இருவரையும் சாகடித்து விட்டதே காதல்!