Skip to main content

இரு வீட்டார் சம்மதத்துடன் திருநங்கை காதல் திருமணம்!

Published on 31/10/2018 | Edited on 31/10/2018
t

 

தூத்துக்குடி தாளமுத்துநகரை சேர்ந்தவர் அருண்குமார். டிப்ளமோ என்ஜினீயரான இவர் ரயில்வேயில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ஸ்ரீஜா. திருநங்கை. இவர் தூத்துக்குடியில் உள்ள வ.உ. சிதம்பரனார் கல்லூரியில் ஆங்கில பட்டப்படிப்பு படித்து வருகிறார். அருண்குமாரும், ஸ்ரீஜாவும் கடந்த ஆறு வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.  

 

இவர்களது காதல் விவரம் வீட்டுக்கு தெரியவரவே இருவீட்டாரின் சம்மதத்துடன் அருண்குமாரும், ஸ்ரீஜாவும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.  அதன்படி இருவீட்டார் பெற்றோரின் ஏற்பாட்டின் பேரில் தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் சிவன் கோவிலில் வைத்து இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்தனர்.

 

 இதற்காக திருமண பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு வினியோகிக்கப்பட்டது. மேலும் திருக்கோவில் அலுவலகத்தில் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்காக முன் பதிவு செய்யப்பட்டது. இதற்காக திருக்கோவில் அலுவலகத்தில் ரூ 600 முன்பணம் செலுத்தி அருண்குமார், ஸ்ரீஜா பெயர் பதிவு செய்ததாக தெரிகிறது.

 

இந்த நிலையில் இன்று காலை திருமணம் செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளுடன் அருண்குமாரும், ஸ்ரீஜாவும் சிவன் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் திருக்கோவிலில் உள்ள கோவில் அலுவலகத்திற்கு சென்று திருமண பதிவினை உறுதி செய்வதற்கான நடைமுறைகளை மேற்கொண்டனர். அப்போது திருக்கோவில் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அருண்குமார், ஸ்ரீஜா திருமணத்தை கோவிலில் நடத்த முடியாது என தெரிவித்ததாக தெரிகிறது. 

 

இதைக் கேட்டு அருண்குமார் ஸ்ரீஜா உள்பட அவர்களுடன் வந்திருந்த உறவினர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கோவிலில் ஏன் திருமணத்தை நடத்த முடியாது என்பது குறித்து அவர்கள், அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு,  அதிகாரிகள் தகுந்த பதிலளிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் திருக்கோவில் அலுவலகத்தைச்  முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினர். இதனால் கோவில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதுகுறித்து தகவலறிந்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் திருக்கோவில் அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருநங்கைகள் மற்றும் கோயில் அதிகாரிகளுக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.   சலசலப்புகளுக்கு இடையே அருள்குமார்- ஸ்ரீஜா திருமணம் நடைபெற்றது.

 

  அப்பொழுது உடன் வந்திருந்த திருநங்கைகள் உறவினர்கள் உள்பட அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

சார்ந்த செய்திகள்