பொது இடங்களில் பாலியல் ரீதியான அத்துமீறலைச் செய்யும் ஆண்கள் குறித்து வெளியில் சொல்வதற்குத் தயங்குவார்கள் பெண்கள். இந்தத் தயக்கமே, ஆண் சபலிஸ்ட்டுகளுக்குத் துணிச்சலைத் தருகிறது. அப்படி ஒரு விவாகரமான ஆள்தான் சென்னை காக்கிகளிடம் பிடிபட்டிருக்கிறான்.
‘ஒரு மாதிரியான ஆளு’ என்று காவல்துறை, அவனை அடையாளம் கண்டது எப்படி?
‘அந்தப் பொறுக்கி என்கிட்ட நடந்ததை எப்படி என் வாயால சொல்ல முடியும்?’ என்கிற ரீதியில் சென்னை – கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் 4 பெண்கள் வெவ்வேறு நாட்களில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், டூ வீலர் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டி, வாகன எண்ணை மறைத்திருந்த ஆசாமி ஒருவன், வாகன சோதனையின்போது பிடிபட்டிருக்கிறான். ‘இது சரியில்லியே’ என்று காக்கிகள் தங்கள் பாணியில் அவனை விசாரித்தபோது, “என் பெயர் ஜெயபிரகாஷ். என் பொழுதுபோக்கே இதுதான்” என்று, தான் செய்த அட்டூழியங்கள் குறித்து வாக்குமூலம் தந்திருக்கிறான்.
சென்னை விமான நிலையத்தில் சரக்கு கையாளும் பிரிவில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்க்கும் ஜெயபிரகாஷ்,
“லேடீஸ் விஷயத்துல நான் வீக். பஸ்ஸுல கூட்ட நெரிசல்ன்னா ரொம்ப வசதியா போயிரும். கோயில் திருவிழா எங்கே நடந்தாலும் போயிருவேன். பைக்ல போய்க்கிட்டே இருப்பேன். ரோட்டுல தனியா நடந்து போற பெண்களைப் பார்த்தால்.. பைக்கை நிப்பாட்டி.. அட்ரஸ் கேட்கிற மாதிரி, பேச்சு கொடுப்பேன். அப்ப அந்தப் பெண்ணோட முகத்தை ரொம்பவும் க்ளோஸ்-அப்ல பார்க்கிறப்ப, எனக்கு ஒரு மாதிரி ஆயிரும். கூச்சப்படாம கையை வைச்சிருவேன். இல்லைன்னா.. பைக்ல இருந்து இறங்கி கட்டிப்பிடிச்சிருவேன். அவங்க கத்துனதும், பைக்கை கிளப்பிருவேன். அப்ப யாரும் பைக் நம்பரை நோட் பண்ணிடக் கூடாதுன்னுதான் நம்பர் பிளேட்டை ஸ்டிக்கர் வச்சு மறைச்சிருக்கேன். நெறய பெண்கள்கிட்ட இந்த மாதிரி நடந்திருக்கேன். பெண்களின் அங்கங்கள் என்றால் எனக்கு அப்படி ஒரு ஆர்வம். ரொம்ப காலமா நான் இப்படித்தான் இருக்கேன். நான் பண்ணுறது தப்புன்னே எனக்குத் தோணல.” என்று கூறி, தன்னை மன்னித்து விட்டுவிடும்படி கெஞ்சியிருக்கிறான்.
“உன்னால் பாதிக்கப்பட்ட பெண்கள் எத்தனை மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பாங்க? நீ பண்ணுனது எல்லாமே மன்னிக்க முடியாத குற்றம். எங்ககிட்டயே அப்பாவி மாதிரி நடிக்கிறியா?” என்று அவனை போலீஸ் ஸ்டைலில் கவனித்துவிட்டு, சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
பத்து மாதங்கள் தன்னைச் சுமந்து பெற்றதும் ஒரு பெண்தான் என்பதை ஜெயபிரகாஷ் போன்ற சபலிஸ்ட்டுகள் மறந்தது ஏனோ?