Skip to main content

காதல் மனைவிக்கு கோவில் கட்டி  வழிபடும் காதல் கணவர்!

Published on 14/02/2019 | Edited on 14/02/2019
s


    
காதல்.....இந்த வார்த்தை பலருக்கு விருப்பம். பலருக்கு வெருப்பு. இந்த நிலையில் தான் காதலர் தினங்களின் கொண்டாட்டத்தினால் காதலர்களை திண்டாடவும் வைக்கிறார்கள். காதல் திருமணங்களில் ஜாதிகள் கடக்கிறது. அவற்றை ஏற்க மறுக்கிறார்கள் பலர். ஆனாலும் ஜாதிகள் கடந்து காதல் வெற்றியும் பெற்றுள்ளது. ஆனால் பெரும்பாலான காதலர்கள் தாங்கள் காதலித்தாலும் தங்களின் பெற்றோர் விருப்பத்துடன் தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று ஆண்டுகள் ஓடினாலும் காத்திருக்கிறார்கள். எப்போது சம்மதம் கிடைக்கிறதோ அப்போதே திருமணம் என்ற காதல் கதைகளும் உண்டு. ஆனால் சமீப காலமாக காதல் என்ற பெயரில் அத்துமீறல்கள் நடப்பதை பெற்றோர்களாலும் பொதுமக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பொது இடங்கள், சுற்றுலா தளங்களில் காதலர்கள் என்ற பெயரில் அத்துமீறி நடந்து கொள்வதை பார்க்கும் பெற்றோர்களின் மனது தங்கள் குழந்தைகளை நினைத்து பதைபதைக்கிறது. அதிலும் பிப்ரவரி 14 காதலர் தினம் என்ற பெயரில் காதலர்கள் பறக்கிறார்கள் பல்வேறு இடங்களுக்கு.. 

 

காதலின் அடையாளமாக தாஜ்மஹால் கட்டப்பட்டது. அது இன்று உலக சின்னமாக கம்பீரமாக நிற்கிறது. ஆனால் பல காதல் கொலையில் முடிகிறது.   ஆனால் புதுக்கோட்டையில் ஒருவர் தன் காதல் மனைவிக்காக ஒரு சிறிய கோயிலை கட்சி ஐந்தரை அடி உயரத்தில் சிலை வடித்து தினசரி வழிபட்டு வருவதுடன் பிறந்த நாளில் அன்னதானமும் வழங்கி வருகிறார்.

 

 புதுக்கோட்டை உசிலங்குளம் 2 ம் வீதி ஓய்வு தொலைதொடர்புத் துறை அதிகாரி சுப்பையா அவர் தான் தன் காதல் மனைவி சென்பகவள்ளிக்கு கோயில் கட்டி சிலை வடித்து வழிபாடு நடத்தி வருபவர். உண்மை காதலரான 83 வயது சுப்பையாவை சந்தித்தோம்..

 

se

 

என் அத்தை மகள் தான் செண்பகவள்ளி.  அத்தை மகளானாலும் எங்களுக்கும் காதல் வந்தது. வயல் வரப்புகளில் எங்கள் காதல் வளர்ந்தது. காதலியை பார்க்க ஏதாவது காரணம் சொல்லி அவர் வீட்டுக்கு போறதும் அடிக்கடி நடக்கும். இப்ப மாதிரி செல்போனா இருந்துச்சு அப்ப கடுதாசியில எழுதி தான் கொடுக்கனும். கவிதை எல்லாம் எழுத வராது.   அதனால் வார்த்தைகளில் தான் காதல் வளர்ந்தது. திருவிழா என்றால் அன்றைக்கு புது சட்டையில போய் நின்றால் சந்தோசமா இருக்கும். அரசல் புரசலாக இருவர் வீட்டிலும் தெரிய வந்துச்சு முதல்ல கொஞ்சம் எதிர்ப்பு தான். இருந்தாலும் கட்டிணா அவளத்தான் கட்டுவேன்னு நான் இருந்துட்டேன். எங்க பிடிவாதத்தை பார்த்து இரு வீட்டாரும் சம்மதம் சொல்லிட்டாங்க.  அதாவது என்னோட 21 வது வயசுல 4.4.1958 ல எங்கள் திருமணம் அனைவரின் ஆசிர்வாதத்தோட நல்லபடியா நடந்துச்சு. அந்த நேரம் அதாவது 1957 -ல் கொல்கத்தாவுல எனக்கு ஓவர்சீஸ் கம்யூனிகேசன் துறையில வேலை. காதலும், கல்யாணமும் என்னை அந்த வேலையை உதற வைத்துவிட்டது. ஒரு வருசம் வேலை செஞ்சுட்டு ஊருக்கு வந்து கல்யாணம் செஞ்சுட்டு தொலை தொடர்பு துறையில வேலையை தொடங்கிட்டேன். 

 

எங்களுக்குள்ள சின்னச் சின்ன பிரச்சனைகள் வந்தாலும் உடனே சமாதானம் ஆகிடுவோம். எங்கள் நல்வாழ்க்கையின் அடையாளமாக 10 குழந்தைகள் பிறந்து 2 குழந்தைகள் இறந்தது. மீதி 4 ஆணும், 4 பெண் குழந்தைகளும் உண்டு. அவர்களையும் நல்ல நிலையில வளர்த்து திருமணமும் செஞ்சு வச்சுட்டோம். இப்ப அவங்க எல்லாரும் பல்வேறு ஊர்களில்  குடும்பம் குழந்தைகளோட இருக்காங்க.
1993 ல் எனக்கு பணி நிறைவு. என்னுடைய சந்தோசமான வாழ்க்கையில் என் மனைவியின் பங்கு அதிகம். குழந்தைகள் வெளியூர்களில் வசிப்பதால நாங்க இருவரும் (காதலர்கள்) தான் வீட்ல இருந்தோம். 2006 ல என் காதல் மனைவி செண்பகத்துக்கு பாலாப்போன சிறுநீரக கோளாறு ஏற்பட்டு வைத்தியம் செஞ்சேன். ஆனா என்னை விட்டு போயிட்டா என் காதலி.. அவள் மறைவு என்னை வதைக்கிறது இப்பவும். 

 

ஒரு வீட்ல அவளுடன் வாழ்ந்துட்டு எப்படி தனிமையில வாழ்வது என்று நினைத்தேன். என் செண்பகம் எப்பவும் என்னுடன் இருக்கனும் என்று நினைத்தேன். காலையில அவ முகத்தில் தான் விழிக்கனும் என்ற என் எண்ணங்களுக்கு சிலை வடிக்கலாம் என்று தோன்றியது. அதனால சுவாமிமலைக்கு போய் ரூ. ஒரு லட்சம் கொடுத்து செண்பகத்தின் உயரமான 5.5. அடி உயரத்தில் சிலை வடிக்க சொல்லி வாங்கி வந்து சின்னதா ஒரு கோயிலை கட்சி அதுக்குள்ள சிலையை வச்சு தினமும் வழிபாடு நடத்தி வருகிறேன். காலை மாலை செண்பகத்தை பார்த்த பிறகு தான் என் மனம் அமைதியடையும். 
     நான் கட்டிய தாலியை அவள் இறந்த பிறகு அவிழ்த்து கொடுத்தார்கள். அந்த தாலியை மீண்டும் செண்பகம் (சிலை) கழுத்தில் கட்டினேன். ஒவ்வொரு நாளும் தீபம் காட்டி வழிபடுகிறேன். சிலையாக செண்பகம் நிற்பதால் நான் தனிமைபட்டவன் இல்லை என் காதலி என்னுடள் இருக்கிறாள் என்பதை உணர்கிறேன். அதனால் எனக்கு நிம்மதி கிடைக்கிறது. அந்த நிம்மதி என் இறுதி காலம் வரை இருந்தால் போதும். நான் இறக்கும் வரை செண்பகத்திற்கு தீபம் காட்டுவேன். செண்பகத்தின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் புத்தாடை அணிவிப்பேன். இறந்த நாளில் நானும் எங்கள் குழந்தைகளும் இணைந்து அன்னதானம் கொடுப்போம். அந்த நிம்மதியோடு வசிக்கிறேன். 


    என் காதலி செண்பகம் என்னோடு வாழ்கிறாள்.. எங்கள் காதல் வாழ்கிறது. இறப்பு உடலுக்கு தான் காதலுக்கு இல்லை என்கிறார் 83 வயது காதலன்.

 

சார்ந்த செய்திகள்