மறு பிரேத பரிசோதனையில் பழனிச்சாமி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வோம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் அவரது குடும்பத்தினர் திங்கள்கிழமை மனு ஒன்றை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிச்சாமியின் மகன் ரோகின்குமார் மற்றும் மனைவி சாந்தாமணி ஆகியோர், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பழனிச்சாமியின் உடலை பெற்றுக்கொள்ளாவிட்டால் அவரது உடலை எரித்து விடப்போவதாக காரமடை உதவி ஆய்வாளர் நாகராஜ் என்பவர் மிரட்டுவதாக தெரிவித்தனர். எனவே பழனிச்சாமியின் உடலை பதப்படுத்தி பாதுகாக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும் அவரது அறிவுரையின் பேரில் அரசு மருத்துவனை டீனிடமும் மனு அளிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் மறு பிரேத பரிசோதனையில் பழனிச்சாமி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வோம் எனவும் தங்களை எந்த அரசியல் கட்சியும் இயக்கவில்லை எனவும் அவர்கள் கூறினர்.