திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், மேற்கு மாவட்ட செயலாளருமான சக்கரபாணி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியை கலெக்டர் அலுவலகத்தில் சந்தித்து தொகுதி மக்களுக்காக கோரிக்கை மனுவை கொடுத்தார்.
இந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் 'கஜா' புயலால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து நஷ்டப்பட்டிருந்த சூழ்நிலையில் இந்த மழை காலத்திலாவது விவசாயம் செய்து தங்கள் நஷ்டத்தை சரிசெய்து கொள்ளலாம் என ஆறுதலோடு இருந்தனர். இந்நிலையில் விவசாய வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலமாக 46 டன் ஊ.P.848இ ஊ.P.868 என்ற ரக மக்காச்சோள விதைகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
தற்போது மழை பெய்துள்ளதால் மக்காச்சோள விதைகளை பெற்ற விவசாயிகள் அதனை நடவு செய்தனர். ஆனால் அவ்விதைகள் நடவு செய்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும் முளைக்கவில்லை. அவ்விதைகள் விதைப்புக்கு ஏற்றாற் போல் தரமான விதைகள் அல்ல. ஒவ்வொரு விவசாயிகளும் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரத்திற்கு செலவு செய்து, இந்த முளைப்பு திறன் இல்லாத இந்த ஊ.P.848இ ஊ.P.868 என்ற ரக மக்காச்சோள விதைகளை நடவு செய்து மேலும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இவ்விதைகளை பயிர் செய்து மற்ற சாகுபடிக்கு செல்ல முடியாத நிலையில் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். எனவே, முளைப்புத்திறன் இல்லாத ஊ.P.848இ ஊ.P.868 என்ற ரக மக்காச்சோள விதைகளை தயாரித்த சம்மந்தப்பட்ட நிறுவனத்தை அரசு தடை செய்து, அந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படியும், முளைப்பு திறன் இல்லாத இந்த மக்காச்சோள விதைகளை பயிர்செய்து நஷ்டப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க தாங்கள் நடவடிக்கை எடுக்கும் படியும்.
2016- 2017 ஆம் ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 'பிரதம மந்திரியின் பயிர் பாதுகாப்பு திட்டத்தில்' பணம் செலுத்தியும் இதுவரை அந்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் வேடசந்தூர் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 109 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தில் 2008-ஆம் ஆண்டு அரசப்பபிள்ளைபட்டி முதல் சத்திரப்பட்டி வரை ஏற்கனவே போடப்பட்ட குடிநீர் குழாய்கள் மிகவும் சேதமடைந்து விட்டது.
சேதமடைந்த குடிநீர் குழாய்களை மாற்றித்தருவதற்கு ரூ.40.00 லட்சம் செலவாகும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் கூறுகின்றனர். எனவே, இந்த சேதமடைந்த குடிநீர் குழாய்களை மாற்றித்தருவதற்கு மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்தோ அல்லது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாகவோ நிதி ஒதுக்கி குடிநீர் பிரச்சனையை தீர்க்க உதவும் படியும், 101 குடியிருப்புகளுக்கான கள்ளிமந்தையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள நீர்தேக்கத் தொட்டி மட்டுமே உள்ளது.
இந்த நீர்தேக்கத் தொட்டி பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு போதுமானதாக இல்லை. எனவே 3.20 இலட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள புதிய நீர்தேக்கத் தொட்டி அமைத்துக் கொடுத்தால் மேற்கண்ட 101 குடியிருப்புகளுக்கு குடிநீர் தடையின்றி வழங்க முடியும். எனவே 101 குடியிருப்புகளுக்கான கள்ளிமந்தையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 3.20 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள நீர்தேக்கத் தொட்டி அமைப்பதற்கு நிதி ஒதுக்கும்படியும், ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, பழனி (4 ஊராட்சிகள்) ஒட்டன்சத்திரம் நகராட்சி, கீரனூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் சேதமடைந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் மற்றும் நியாயவிலைக்கட்டிடங்கள் ஆகியவற்றை அகற்றி விட்டு புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, புதிய நியாயவிலைக்கட்டிடம் கட்டித்தர வேண்டுமென்றும், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த ஆதார் சேவை மையம் தற்போது செயல்படுவதில்லை. ஒட்டன்சத்திரத்தில் நகராட்சி அலுவலகத்தில் மட்டுமே தற்போது ஆதார் சேவை மையம் செயல்படுவதால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது.
எனவே ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வந்த ஆதார் சேவை மையத்தை மீண்டும் செயல்பட தாங்கள் ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார். அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. சக்கரபாணியிடம் உறுதி கூறியும் இருக்கிறார்.