சேலம் அருகே, லாரி ஓட்டுநரை மர்ம நபர்கள் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே கருக்குப்பட்டி பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில், ஞாயிற்றுக்கிழமை (ஜன. 8) ஒரு சடலம் மிதப்பதாக ஊருக்குள் தகவல் பரவியது. இதையடுத்து, தாரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தை மீட்க தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்க கிணற்றில் இறங்கியபோது, சடலம் முழுமையாக இல்லாமல் இடுப்பு வரையிலான பகுதி ஒரு பகுதி மட்டும் கிடப்பதும் கைகள், கால்கள் துண்டிக்கப்பட்டு கிடப்பதும் தெரியவந்தது. பாதியாக கிடந்த சடலத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இறந்து கிடந்தவர் யார் என்று உடனடியாக தெரியவில்லை. உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.
விசாரணையில், கிணற்றில் சடலமாகக் கிடந்தவர் தாமரங்கலம் அருகே உள்ள பெரிய சோரகையைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணி (50) என்பது தெரியவந்தது. அவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடைசியாக மணி, தனது மனைவிக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அதன்பின் அவருடைய அலைபேசி அணைத்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மர்ம நபர்கள், மணியை கொலை செய்த பிறகு கைகள், கால்களை தனித்தனியாகவும், உடலை இரண்டு துண்டாகவும் வெட்டி எறிந்துள்ளனர். துண்டிக்கப்பட்ட உடலின் மற்ற பாகங்களும் அதே கிணற்றுக்குள் கிடக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர். இதையடுத்து மின் மோட்டார்கள் மூலம் விவசாய கிணற்றில் இருந்த நீரை வெளியேற்றினர். ஆனாலும் காவல்துறைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அங்கே உடல் பாகங்கள் ஏதும் தென்படவில்லை. அதேநேரம், மணியை வேறு எங்காவது கொலை செய்துவிட்டு, சடலத்தின் ஒரு பகுதியை கிணற்றில் வீசியிருக்கலாம் என்று கருதுகின்றனர்.
இந்நிலையில், நிகழ்விடத்திற்கு மாவட்ட காவல்துறை எஸ்.பி. சிவக்குமார், ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். காவல்துறை மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தடய அறிவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். கொலையுண்ட மணி ஒருவரிடம் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். அத்துடன் வீட்டு கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மரங்களை வாங்கி விற்கும் தொழிலும் தனியாக செய்து வந்துள்ளார். இந்த தொழில் மூலம் அவரிடம் பணம் தாராளமாக புழங்கியதாக சொல்கின்றனர். இந்த தொழிலில் சிலர் அவருக்கு போட்டியாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களை பார்க்கையில், மரம் அறுக்கும் ஆக்ஸா பிளேடு இயந்திரத்தால் உடல் பாகங்களை அறுத்து எடுத்திருக்கலாம் எனத் தெரிய வருகிறது.
சந்தேகத்தின் பேரில் மணியுடன் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் மூன்று பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. அண்மைக்காலமாக மணியிடம் அலைபேசி வழியாக யார் யார் அடிக்கடி பேசி வந்துள்ளனர்? என்ற விவரங்களை காவல்துறையினர் சேகரித்து, அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். கடைசியாக அவர் மனைவியிடம் பேசிய அலைபேசி டவர் சமிக்ஞைகள் அடிப்படையிலும் விசாரணை நடக்கிறது. தொழில் போட்டியா? அல்லது வேறேதும் காரணத்தினால் கொலை நடந்ததா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் இதுபோன்ற கொடூரமான கொலை இதற்கு முன்பு நடந்தது இல்லை. இந்த சம்பவம் தாரமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.