கர்நாடகா மாநிலம், பெங்களுரூ புறநகர் பகுதியான ஈஜீபுரா பகுதியில் உள்ளது கோதண்டராமசுவாமி கோயில். இது தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான கோயில். இந்த கோயில் வளாகத்தில் பிரமாண்டமான முறையில் பெருமாள் சிலையை நிறுவ முடிவு செய்த கோயில் நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியது.
தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் பிரமாண்டமான பாறை எங்குள்ளது என தேடியதில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் அருகே கொரக்கோட்டை கிராமத்தில் இருப்பது தெரியவந்தது. அதன்பின் சிலைக்காக பாறையை வெட்டியெடுக்க தமிழக அரசிடம் முறைப்படி அனுமதி பெற்று அந்த மாலையில் இருந்த ராட்சச பாறையை வெட்டியெடுத்து பெருமாள் சிலையை இரண்டு பாகமாக செய்தது. இந்த சிலையின் மொத்த உயரம் 108 அடி. இந்த பெருமாள் சிலை மட்டும் 64 அடி உயரம், 24 அடி அகலத்தில் செய்தது. அதன்பின் 5 தலை நாகம் சிலை தனியாக ஒருக்கல்லில் செதுக்கப்பட்டது, பீடம் தனியாக அமைக்கப்படுகிறது.
2018 டிசம்பர் மாதம் 7ந்தேதி கொரக்கோட்டையில் இருந்து 240 டயர்கள் கொண்ட கண்டெய்னர் வண்டியில் பெங்களுரூவை நோக்கி புறப்பட்டது இந்த சிலை. தெள்ளார், திண்டிவனம், செஞ்சி, சேத்பட், அவலூர்பேட்டை, திருவண்ணாமலை, செங்கம் வழியாக சிங்காரப்பேட்டைக்கு சென்றுள்ளது.
சிங்காரப்பேட்டையில் இருந்து ஊத்தங்கரை செல்லவுள்ள நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் பொதுநலவழக்கு பொங்கலுக்கு முன்பு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று ஜனவரி 18ந்தேதி, அந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணா, ராஜமாணிக்கம் தலைமையிலான அமர்வில் வந்தது. அப்போது, வழக்கு தொடுத்த ரத்தினம் தரப்பிடம் பல கேள்விகளை கேட்டனர். தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர்கள், அவர்கள் சிலையை எடுத்துச்செல்ல அனுமதி கேட்டார்கள், அரசாங்கம் சிலையை எடுத்துச்செல்ல பல கட்டுப்பாடுகள், விதிமுறைகளை கூறி அரசாணை வெளியிட்டுள்ளது என்றார்.
அந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகள் சரியாக பின்பற்றி சிலை எடுத்துச்செல்லப்படுகிறதா என தமிழக அரசு 4 வாரத்தில் நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இப்படியொரு உத்தரவு தரப்பட்டுள்ள தகவல் கோயில் நிர்வாகிகளுக்கு தெரிந்ததும், எவ்வளவு வேகமாக சிலையை தனது மாநிலத்துக்கு எடுத்துச்செல்ல முடியும்மோ, அத்தனை வேகத்தில் எடுத்து சென்றுவிட வேண்டும் என கோயில் அறக்கட்டளைதாரர்கள் ஆலோசனை நடத்திவருகின்றனர். மேலும், சிலையின் மற்றொரு பகுதி, கொரக்கோட்டையில் உள்ளதால், அதற்கு எந்த சிக்கலும் வந்துவிடக்கூடாது என அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர்.