திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி 06.04.2020 திங்கள்கிழமை ‘குடிகெடுக்கும் குடி’: குடி மூழ்கச் செய்கிறதே! என்ன பரிகாரம்! என்றை தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "கரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவால் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுவிட்டன.
‘குடியும்‘, ‘குடித்தனமுமாக’ காலத்தைக் கழிக்கும் குடிமகன்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். குடியால் ஏற்படும் கேடே இதுதான்.
குடிகாரர்கள் தங்களுக்குத் தாங்களே கேடு ஏற்படுத்திக் கொள்வதோடு குடும்பங்களையும் சீரழித்து வருகின்றனர்.
மதுபானம் கிடைக்காத இந்தத் தருணத்தில், ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்?’ என்ற பழமொழிக்கு ஏற்ப கண்டதையும் குடித்து போதைப் பசியைத் தீர்த்துக் கொள்ளத் துடியாய்த் துடிக்கின்றனர்.
வார்னீஷைக் குடிப்பது, ஆஃப்டர் ஷேவிங் லோசனைக் குளிர்பானத்துடன் கலந்து குடிப்பது என்ற முறையில் உயிர்களைப் ப(லி)றிகொடுக்கும் மனிதர்களை நினைத்தால் ‘பகீர்’ என்கிறது - நமக்கும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
இந்தப் பிரச்சினையைக் கேரள அரசு எப்படி கையாள்கிறது என்பதைக் கவனிக்கலாம்.
மனநல மருத்துவமனைகளை விரிவாக்கலாம். போதை மறுவாழ்வு மய்யங்களின் (De-addiction Centre) மூலம் மதுவுக்கு அடிமையான குடிமக்களை (Alcohol Dependent Syndrome) கரையேற்ற வேண்டியது இந்தக் காலகட்டத்தில் கட்டாயம்.
ஒரு கெடுதலிலும் நல்லது என்பதுபோல, இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டாவது மதுப் பே(போ)தையர்களை மீட்க முடியுமா? அந்தப் போதையை வீழ்த்த முடியுமா? என்ற எதிர்பார்ப்புதான் மக்கள் நலனில் அக்கறை கொண்ட வர்களின் நல்லெண்ண எதிர்பார்ப்பாகும்!
குடிப் பிரியராகி, குடிவெறியர்களான அருமைத் தோழர்களே! உங்கள் குடும்பத்தையும் ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். இதுதான் சரியான சந்தர்ப்பம்!
மனக் கட்டுப்பாட்டுடன் கடைபிடித்தால் உங்கள் ஆயுளும் நீளும் - உங்கள் குடும்பமும், சமூகமும் மகிழ்ச்சியில் திளைக்கும் - உங்கள் பிள்ளைகளும் பண்பட்ட முறையில் படித்தவர்களாக சமூகம் மதிக்கும் ஒளிவாணர்களாகத் திகழ்வார்கள்.
மக்கள் நலனே தன் வாழ்வின் நலனாக 95 ஆம் ஆண்டு வயதிலும் உழைத்த தலைவரின் தொண்டன் என்ற முறையில் சமூக நலக் கண்ணோட்டத்தோடு விடுக்கும் உருக்கமான வேண்டுகோள் இது." இவ்வாறு கூறியுள்ளார்.