சென்னை ஐஐடியில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த மாணவி சக மாணவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக 15 நாட்களில் பதில் தர ஐஐடி இயக்குநருக்குத் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
சென்னை ஐஐடியில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி ஒருவருக்கு 3 மாணவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த நிலையில், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவி துறை பேராசிரியரிடம் புகார் கொடுத்த போதிலும் அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியிருந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய ஐஐடியின் 'உள் புகார் கமிட்டி' அறிக்கை அளித்த போதிலும் ஐஐடி நிர்வாகம் தரப்பில், இந்த பாலியல் புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்படாததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் காவல்நிலையத்திலும் நடவடிக்கை எடுக்கப்படாததால் பாதிக்கப்பட்ட மேற்குவங்க மாணவி கடந்த மாதம் 22ஆம் தேதி மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தநிலையில் சமீபத்தில் இந்த புகார் தொடர்பாக முன்னாள் மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்ஜாமீன் கோரி ஐஐடி பேராசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். வேதியியல் பேராசிரியர்கள் பிரசாத், ரமேஷ், எல்.கர்தாஸின் முன்ஜாமீன் மனுக்கள் வரும் 18 ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. அந்த முன்ஜாமீன் மனுவில், 'புகாரளித்த மாணவி, அவருடன் படித்த சக மாணவர்கள் ஒன்றாக ஓய்வு நாட்களில் பயணித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு அந்த மாணவி ஐஐடி நிர்வாகத்திடம் கொடுத்த புகாரில் ஆதாரங்கள் இல்லை. நிர்வாகத்திடம் தந்த புகாரில் எங்கள் பெயர் இல்லாத நிலையில் போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் எங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது.
இதே நேரத்தில் இந்த விவகாரத்தில் மாணவி கொடுத்த புகாரின் மீது ஐஐடி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை குறித்து 15 நாட்களில் பதில் தர ஐஐடி இயக்குநருக்குத் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.