Skip to main content

வெளிநாட்டுக்கு தப்பித்து செல்வதை தடுக்கவே கார்த்தி சிதம்பரம் மீது லுக் அவுட் சுற்றறிக்கை:மத்திய அரசு

Published on 07/08/2017 | Edited on 07/08/2017
வெளிநாட்டுக்கு தப்பித்து செல்வதை தடுக்கவே
கார்த்தி சிதம்பரம் மீது லுக் அவுட் சுற்றறிக்கை
 பிறப்பிக்கப்பட்டது: மத்திய அரசு

கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பித்து செல்வதை தடுப்பதற்காகவே அவர் மீது லுக் அவுட் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2006ஆம் ஆண்டில் மும்பையில் தொடங்கப்பட்ட ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம், 2007ஆம் ஆண்டில் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற, மத்திய பொருளாதார விவகாரங்கள் துறையின் கீழ் செயல்படும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரி விண்ணப்பித்தது. இதனையடுத்து மொரீஷியஸ் நாட்டிலிருந்து 4 கோடியே 62 லட்ச ரூபாய் முதலீட்டை பெற அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்தது.

ஆனால் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் சட்ட விரோதமாக 305 கோடி ரூபாய் நேரடி அந்நிய முதலீட்டை பெற்றுள்ளது. இதுதொடர்பாக 2008ல் வருமான வரித்துறை விசாரணை நடத்திய போது, கார்த்தி சிதம்பரத்தின் செஸ் மேனேஜ்மெண்ட் நிறுவனத்திடம் ஆலோசனைகளை பெற்றுள்ளது. ஆனால் அதற்கான கட்டணமாக செலுத்தப்பட்ட 10 லட்ச ரூபாய்க்கு மேல், அட்வாண்டேஜ் ஸ்டாடஜிக் நிறுவனத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த டெல்லி சிபிஐ கார்த்தி சிதம்பரத்தையும் வழக்கில் சேர்த்துள்ளது.

இந்த ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிபிஐ விசாரணைக்கு இரண்டு முறை ஆஜராகாததால், கார்த்தி சிதம்பரம், ரவி விஸ்வநாதன், மோகனன் ராஜேஷ், பாஸ்கர ராமன் ஆகியோர் மீது லுக் அவுட் சர்க்குலர் பிறப்பிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து நால்வரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி எம்.துரைசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, நால்வர் மீதும் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது உண்மை தான் என்றும், மல்லையா விவகாரத்தில் ஏற்பட்ட அனுபவமே கார்த்தி உள்ளிட்டோர் மீது "லுக் அவுட்" சர்க்குலர் பிறப்பிக்கப்பட்டது என தெரிவித்தார்.

 சிபிஐ விசாரணையிலிருந்து தப்பிக்கக்கூடாது என்பதையும், முறையாக ஆஜராகியிருந்தாலே இந்த பிரச்சினை வந்திருக்காது என்று தெரிவித்ததுடன், வழக்கு குறித்து பதில் மனுத்தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார். சட்டவிரோதமாக சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றால் எந்த நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு பதிவு செயப்பட்டதோ அங்கே சென்று இது தவறாக பிறப்பிக்கப்பட்டதாக முறையிடலாம், நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை பொறுத்து விசாரனை அமைப்பு முடிவெடுக்கும் என்று கூறி, சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை சீலிட்ட கவரில் இரண்டு கடிதங்கள் தாக்கல் செய்தார்.

கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் தியாகராஜன், சதீஷ் பராசரன் ஆகியோர் ஆஜராகி, மனுதாரர்களை மல்லையாவுடன் ஒப்பிடுவது மோசமான உதாரணம் என்றும், கார்த்தி சிதம்பரம் ஒன்றும் மல்லைய்யா போல் தப்பி செல்லவில்லை என்றும் தெரிவித்தனர். ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களை டெல்லி சிபிஐ நீதிமன்றம் விடுவிக்கப்பட்டபோதே, ஏர்செல் மேக்சிஸ் விவகாரம் முடிந்துவிட்டதாகவும், அதை தொடர்புபடுத்தி வழக்குப்பதிவு செய்வதும், மறுபடியும் இணைக்கவும் முடியாது என்று தெரிவித்தார்.

சுற்றறிக்கையில் ரகசியம் காப்பது என்பது தனி மனிதம் பிற இடங்களுக்கு செல்லும் உரிமைக்கு எதிரானது என்றும், சுற்றறிக்கையை தங்களுக்கு தரவேண்டும் என்று தெரிவித்ததுடன், சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட இவர்கள் தலைமறைவானவர்கள் அல்ல என்றும் தெரிவித்தார். கார்த்தி உள்ளிட்டோரின் விவகாரங்கள் மல்லைய்யா / தாவூத் இப்ராஹிம் விவகாரங்கள் சமமானது அல்ல என்பதால், சம்மன் பிறப்பிக்கப்பட்ட முதல் முறை ஆஜராகவில்லை என்பதற்காக லுக் அவுட் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது எந்த விதத்தில் நியாயமானது என கேள்வி எழுப்பினார்கள்.

மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்ற முதல் நோட்டீஸுக்கு வழக்கறிஞர் மூலம் விளக்கம் அளித்த கார்த்தி, இரண்டாவது நோட்டீஸை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளதாகவும், இருமுறை ஆஜராகாமல் இருந்துவிட்டு லுக் அவுட் சுற்றறிக்கை எதிர்த்து வழக்கு தொடர முகாந்திரம் இல்லை என குற்றம் சாட்டினார்.  விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தால் அவர்கள் நாட்டில் இருக்கிறார்களா என்பதிலும், வெளியேறக்கூடாது என்பதிலும் கவனமாக உள்ளோம் என விளக்கமளித்தார். இதே போல சின்ன பாலன் ரெட்டி என்பவர் மீது வழக்கு பதிவு செய்த  உடனே அமெரிக்க சென்றவர், இதுவரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி எம்.துரைசாமி, நால்வருக்கும் லுக் அவுட் சர்க்குலரின் நகல்களை தர உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

- சி.ஜீவாபாரதி 

சார்ந்த செய்திகள்