கிருஷ்ணகிரி, பெங்களூரு, திருச்சி, சென்னை என முக்கிய நகரங்களுக்குச் செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் தினமும் கடந்த செல்லக்கூடிய பகுதி திண்டிவனம். ஆனால், இங்கு பேருந்து நிலையம் இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
முன்னதாக ரயில்வே லைனை ஒட்டி, இந்திராகாந்தி பேருந்து நிலையம் ஒன்று சிறிய அளவில் இருந்தது. ஆனால், திண்டிவனத்தை கடப்பதற்குத் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டது. மேலும், அதன் அருகிலேயே சென்னை - திருச்சி ரயில்வே பாதையும் அமைந்திருக்கிறது. அதனால், பழைய பேருந்து நிலையத்திற்குச் சென்று வர பேருந்து ஓட்டுநர்களும் சிரமப்பட்டனர். அதுமட்டுமின்றி பல விபத்துக்களும் ஏற்பட்டன. மேலும், கடுமையான போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியாகவும் மாறிவிட்டது.
இதையடுத்து, திண்டிவனம் நகரத்திற்கு பெரிய பேருந்து நிலையம் வேண்டுமென்று நகர மக்கள் பல்வேறு ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறார்கள். இதற்காக பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை, பல்வேறு அரசியல் கட்சிகள், பொது நல இயக்கங்கள் நடத்தின. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பேருந்து நிலையம் அமைக்க இரண்டு இடங்களை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதில் அரசியல் கட்சியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அந்த பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது. இந்த நிலையில், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதை நிறைவேற்றும் வகையில் 25 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 6 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.
இதற்காக அமைச்சர்கள் நேரு, பொன்முடி ஆகியோர் 6ஆம் தேதி திண்டிவனம் வந்து புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் நேரு, “திண்டிவனம் பகுதியில் 25 கோடியே 50 லட்சம் செலவில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் வருவாயை கூடுதலாக்க வேண்டும் என்பதற்காக நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் கட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோன்று பாதாள சாக்கடை திட்ட பணிகள், குடிநீர் திட்ட பணிகள், கழிவறை திட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சட்டசபையில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்று கூறினார்.