தமிழகத்தில் 68 நாட்களுக்குப் பிறகு பொதுமக்களுக்காக ரயில் மற்றும் அரசுப் பேருந்துகள் ஓடத் தொடங்கின. அரசு அனுமதி தராததால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் பேருந்துகள் ஓடவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளை இயக்குவது குறித்து இன்று ஆட்சியர் அறிவிக்க உள்ளதாகத் தகவல் கூறுகின்றன.
சென்னையில் இதுவரை விமான நிலையங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் தளர்வு தரப்பட்டது. அதன்படி, சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் ஓடத்தொடங்கின. அரசு தளர்வு அளித்துள்ளதால் சென்னையில் ஆட்டோ ஓட்டுநரைத் தவிர்த்து இரு பயணிகள் வரை பயணிக்கலாம்.
நாடு முழுவதும் பொதுமக்களின் பயணத்துக்காக இரண்டு மாதங்களுக்குப் பிறகு 200 சிறப்பு ரயில்கள் இன்று இயக்கப்படுகின்றன. அதில் தமிழகத்தில் நான்கு சிறப்பு ரயில்களில் கோவையில் இருந்து இரண்டு ரயில்கள் பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றன. கோவை- காட்பாடிக்கு இன்டர்சிட்டி ரயிலும், கோவை- மயிலாடுதுறைக்கு ஜனசதாப்தி ரயிலும் இயக்கப்பட்டன. மதுரையில் இருந்து விழுப்புரத்துக்கும், திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கும் பயணிகளுடன் சிறப்பு ரயில் இயக்கப்பட்டன. கரோனா பொதுமுடக்கம் தொடங்குவதற்கு முன்பு கடைசியாக மார்ச் 24- ஆம் தேதி பேருந்து, ரயில் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசுப்பேருந்துகள் இயக்கப்பட்டாலும் குறைந்த அளவிலான பயணிகளே பயணம் செய்கின்றனர்.