கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பேரூராட்சி ஊழியர் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த வாரம் உயிரிழந்துள்ளார். அதனைத்தொடர்ந்து கடந்த 4ஆம் தேதி அரசு மருத்துவ குழுவினர் பேரூராட்சி ஊழியர்கள் 30 க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் பேரூராட்சி ஊழியர்கள் இருவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அந்த ஊழியர்கள் இருவரும் சிதம்பரம் அரசுராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தாசில்தார் சுமதி அவர்கள் பேரூராட்சி அலுவலகத்தினை மூன்று நாட்கள் மூடி வைக்க உத்தரவிட்டுள்ளார். பேரூராட்சி அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் திடீரென்று பேரூராட்சி அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அலுவலகம் திறந்து செயல்பட்டால் நோய் பரவி விடுமோ என்று அப்பகுதி மக்கள் அச்சப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அருகிலுள்ள மக்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் பேரூராட்சி அலுவலகத்தின் முன் திரண்டு வந்து அலுவலக கேட்டை இழுத்துப் பூட்டி உள்ளனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அலுவலக ஊழியர்கள் கூறும்போது, அலுவலக குடோனில் இருந்து கிருமிநாசினிகள் எடுப்பதற்காக திறக்கப்பட்டது. அது விவரம் புரியாமல் பொதுமக்கள் அலுவலகப் பணிக்காக திறந்ததாக எண்ணி கேட்டை பூட்டி உள்ளனர் என்று கூறுகின்றனர்.