சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமின் நிறைவு விழா இன்று (13/04/2022) மாலை 06.00 மணிக்கு நடைபெற்றது.
இதில் கலந்துக் கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். எந்த முறைகேடுகளுக்கும் இடம் கொடுக்காமல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. மேயர் என்பதைப் பதவியாக நினைக்காமல் பொறுப்பு என நினைத்து செயல்பட வேண்டும். மக்களால் முதன்முறையாக மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். உள்ளாட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அதைப் பதவியாக நினைக்காமல் பொறுப்பாக எண்ண வேண்டும். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒவ்வொரு அடியையும் கவனமுடன் எடுத்து வைக்க வேண்டும்.
மக்கள் சேவையில் மாநகராட்சி, நமது சேவையில் நகராட்சி என்பது தான் இலக்காக இருக்க வேண்டும். நிதி நிலைக்கு ஏற்ப உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும். மாமன்றக் கூட்டங்களை கால்முறைப்படி மேயர்கள் கூட்ட வேண்டும். மக்கள் மனதில் ஆழமாகப் பதியக்கூடிய நிலையில் கவுன்சிலர்கள் தான் இருக்கிறார்கள். மக்களின் குறைகளைக் கேட்டு உடனடியாக, அதை சரி செய்து மக்களோடு மக்களாக இருக்க வேண்டும்.
அனைத்து திட்டங்களையும், முறையாக செயல்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்; நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். நாங்கள் திட்டங்கள் தீட்டினாலும் பெரிய சாதனைகள் செய்தாலும், அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணி உங்களிடம் தான் உள்ளது. பெண்கள் படிக்கக்கூடாது, வேலைக்கு போகக்கூடாது என இருந்ததை மாற்றியது திராவிட இயக்கம் தான். உங்களை நம்பி நாங்கள் எங்கள் திட்டங்களை ஒப்படைத்திருக்கின்றோம். இந்த அரசுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இந்த விழாவில் நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.