தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று (12.10.2021) அறிவிக்கப்பட இருக்கின்றன. 74 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்கு எண்ணும் பணியில் 30,245 அலுவலர்களும் பாதுகாப்புப் பணியில் 6,278 போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட உள்ளன. https://tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ளத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
திருவாரூர் நன்னிலத்தில் விசலூர் 5வது ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் ராஜசேகரன் வெற்றிபெற்றுள்ளார். நன்னிலம் 3வது ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் சங்கர் வெற்றிபெற்றுள்ளார். பள்ளிவாரமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவருக்கான இடைத்தேர்தலில் சுபஸ்ரீ வெற்றிபெற்றுள்ளார். திருவாரூர் ஆலங்காடு 6வது வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த கலையரசன் வெற்றிபெற்றுள்ளார். மாங்குடி 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளர் மைதிலி வெற்றி பெற்றுள்ளார். வங்க நகர் 4வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராஜேந்திரன் வெற்றிபெற்றுள்ளார். திண்டுக்கல் கணவாய்பட்டி 4வது வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மாரியப்பன் வெற்றி பெற்றுள்ளார். வத்தலக்குண்டு செக்காப்பட்டி 1வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பாரதி வெற்றிபெற்றுள்ளார். பெரம்பலுர் வாலிகண்டபுரம் 7வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் உதயமன்னன் என்பவர் வெற்றிபெற்றுள்ளார். பிரம்மதேசம் வார்டு உறுப்பினர் தேர்தலில் சந்தியா மற்றும் சு.ஆடுதுறையில் பன்னீர்செல்வம் ஆகியோர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்
140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 16 இடங்களில் திமுகவும் ஒரு இடத்தில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளது. 1,381 ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக 45 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும், பாமக 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.