ஒன்றியக்குழு, மாவட்ட ஊராட்சி க்குழுத் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலை தள்ளி வைக்க ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளதாக சேலத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் தமிழக ஆளுநர், மாநில தேர்தல் ஆணையர் உள்ளிட்டோருக்கு பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
தமி-ழகத்தில் இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஜன. 2- ஆம் தேதி வெளியிடப்பட்டன. இறுதி நிலவரம் மறுநாளே தெரிய வந்தது. ஒன்றியக்குழு, மாவட்ட ஊராட்சிக்குழுக்களுக்கு தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு வரும் 11- ஆம் தேதி (சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது.
திமுக பெரும்பான்மை பெற்றுள்ள இடங்களில் மறைமுகத் தேர்தலை தள்ளி வைக்க ஆளுங்கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு கவுன்சிலர் புவனேஸ்வரி செந்தில்குமார் தமிழக ஆளுநர், மாநிலத் தேர்தல் ஆணையம், சேலம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அளித்துள்ள புகார் மனு விவரம்:
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் 14- வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். வரும் 11- ஆம் தேதி காலை ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கும், மதியம் துணைத்தலைவர் பதவிக்கும் மறைமுகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை தோற்றவர்களாகவும், தோல்வி அடைந்தவர்களை வெற்றி பெற்றவர்களாகவும் அறிவிக்கவும், சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தவும் அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். அதிகாரிகளையும் மிரட்டி வருகின்றனர்.
மறைமுகத் தேர்தல் நாளன்றும் எதிர்க்கட்சி கவுன்சிலர்களை கடத்த திட்டமிட்டுள்ளனர். அதிமுக வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேர்தலை தள்ளி வைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
ஒன்றியக்குழுத் தலைவர், துணைத்தலைவர் மறைமுகத் தேர்தலின்போது உறுப்பினர்களின் வருகைப்பதிவேடு, வேட்புமனுத் தாக்கல் செய்தல், வாக்குச்சீட்டு அளித்தல், வாக்குப்பதிவு, தேர்தல் முடிவு வெளியிடுதல், ஒன்றியக்குழு தீர்மான புத்தகம், உறுப்பினர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வருகை தருதல், கூட்டம் முடித்தல் வரையிலான நிகழ்வுகளை கேமரா மூலம் பதிவு செய்யப்பட வேண்டும். அதன் காணொலிப் பதிவை எனக்கு வழங்க வேண்டுகிறேன். அதற்கான உரிய கட்டணத்தையும் செலுத்த தயாராக இருக்கிறேன். இவ்வாறு புகார் மனுவில் புவனேஸ்வரி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.