தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, புறநகர் நாசரேத் மார்காஷியஸ் பள்ளி, சாயர்புரம், வாகைக்குளம் உள்ளிட்ட 12 மையங்களில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.
இதற்கான பணியில் 2875 அரசுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று காலை உள்ளாட்சிகளின் நான்கு பதவிக்கான வாக்குச்சீட்டுகள் தரம் பிரிக்கப்பட்டு முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது.
மாவட்டத்தின் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய வாக்கு பதிவு மையத்தில் மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆனால் முதல் சுற்று முடிவுகளை கூட அறிவிக்காமல் பத்திரிகையாளர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் பத்திரிக்கையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை அறிவிப்புகள் வெளியிடப்படாததால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வெளியே வேட்பாளர்கள் மற்றும் முகவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.