தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இரண்டு வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும், இந்த விடுபட்ட மாவட்டங்களில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. எனவே இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழங்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் வரும் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அரசின் சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விவாதிப்பதற்காக மாநில தேர்தல் ஆணையத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று (06.09.2021) நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் நடைபெறாத அந்த 9 மாவட்டங்களுக்கு இடஒதுக்கீடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கும், தென்காசி, ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.