திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து, பேருந்து ஒன்று சத்திரம் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளது. பேருந்தை ஓட்டுநர் ஜெகநாதன் ஓட்டிச்சென்றார். நடத்துநராக ராஜா பணியிலிருந்துள்ளார். பேருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்த நிலையில், பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் பேருந்தை சுத்தம் செய்துள்ளனர். அப்போது சீட்டுக்கு அடியில் ஒரு மணிபர்ஸ் கிடந்துள்ளது. அதனை எடுத்து இருவரும் பார்த்த போது அதில் 12 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இருவரும் அந்த மணிபர்ஸை திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அறிவழகனிடம் ஒப்படைத்தனர். யாருடையது என்பது குறித்து அவர் விசாரணை நடத்தினார். அப்போது நீதிமன்றம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து ஏறி, சத்திரம் பேருந்து நிலையம் வரை பயணித்த தில்லைநகரை சேர்ந்த கோபிநாத்(33) என்பவருடைய பர்ஸ் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கோபிநாத்தை தொடர்பு கொண்ட இன்ஸ்பெக்டர், அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துள்ளார். அதே சமயத்தில் மணிபர்ஸை நேர்மையாக ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துநரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துள்ளார். அவர்கள் முன்னிலையில் கோபிநாத்திடம் பர்ஸ் ஒப்படைக்கப்பட்டது. ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் இந்த நேர்மையான செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டிவருகின்றனர்.