தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 27-ந் தேதி நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் கடலூர், கம்மாபுரம், குறிஞ்சிப்பாடி, மங்களூர் மேல் புவனகிரி, பண்ருட்டி, பரங்கிப்பேட்டை ஆகிய ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் மாவட்டத்தின் பிற ஊராட்சி ஒன்றியங்களான விருத்தாசலம், அண்ணாகிராமம், காட்டுமன்னார் கோவில், கீரப்பாளையம், குமராட்சி, நல்லூர், திருமுட்டம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கான இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த இரண்டாம் கட்ட தேர்தலில் மாவட்டத்தில் 2,397 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 287 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 12 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 342 ஊராட்சி தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்காக மொத்தம் 1,292 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளில் 6,01,163 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது.இந்த தேர்தலுக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.