தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (27.12.2019) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இரண்டாம் கட்டத்தேர்தல் வரும் 30- ஆம் தேதி நடக்கயிருக்கிறது. அதன் பிறகு ஜனவரி 2- ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிப்படவுள்ளது.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகளுக்கு பாதுகாப்பு கேட்டு திமுக கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் வாக்குப்பெட்டிகள் முறைகேடு செய்யாமல் இருக்க அவற்றை பாதுகாப்பாக வைக்க வேண்டும். வாக்குப்பெட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது பற்றி மாநில தேர்தல் ஆணையம், டி.ஜி.பி, ஆட்சியர்கள், எஸ்.பிக்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். வாக்குப்பெட்டிகள் வைக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும். வாக்கு எண்ணிக்கையை அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை வரும் திங்கள்கிழமை (டிச.30) விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.