அதிகாரிகளின் துணை கொண்டு வாக்காளர் பட்டியலை திருத்தி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ஒருவருக்கு, வாக்காளர் பட்டியலில் இரு இடங்களில் பெயர் இருக்கின்றது, அவ்வேட்பாளரை நிராகரிக்க வேண்டுமென அதிமுக கூறிவந்த நிலையில், திமுக தரப்பு அதை போராடி வென்றுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள கல்லல் ஒன்றியத்தில் 951 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் எஸ்.ஆர்.பட்டணம், கலிபுலி மற்றும் கல்லுப்பட்டி ஊரட்சிகளை உள்ளடக்கிய 12 வது வார்டிற்கான ஒன்றியக்கவுன்சிலர் தேர்தலில் திமுக சார்பில் எஸ்.ஆர் பட்டணத்தை சேர்ந்த செல்வராணி, அதிமுக சார்பில் முன்னாள் ஒன்றிய குழு தலைவரும், தற்போது காரைக்குடி ஆவின் சேர்மனாக உள்ள அசோகன் மனைவி பிரேமா, மஞ்சுளா மற்றும் லதா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதில் திமுக சார்பான வேட்பாளர் செல்வராணியின் வேட்புமனுவினை நிராகரித்திட பல தகிடுதத்தங்களை செய்துள்ளது அதிமுக தரப்பு. இதனின் ஒரு பகுதியாக காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் செல்வராணிக்கு வாக்கு இருப்பதாக அதிகாரிகளின் துணைக்கொண்டு வாக்காளர் பட்டியலில் செல்வராணியின் பெயரை சேர்த்துள்ளது அதிமுக தரப்பு. இதனையே காரணம் காட்டி வேட்புமனுவினை தள்ளுபடி செய்யவும் வற்புறுத்தியுள்ளது.தாமதமாக புரிந்து கொண்ட திமுக தரப்போ, முன்னரே வாக்காளர் பட்டியலில் நீக்கிய, தற்பொழுது சேர்க்கப்பட்ட கணினி ஆவணங்களை தேர்தல் அதிகாரியிடம் காண்பித்து போராடிய நிலையில் செல்வராணியின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.