Skip to main content

வாங்கிய கடனை திருப்பி செலுத்தமுடியாத காரணத்தால் தாய் தன் குழந்தையுடன் தற்கொலை முயற்சி..!

Published on 11/09/2020 | Edited on 11/09/2020

 

Loan issue in kallakuruchi

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் வயது 28. இவரது மனைவி பரமேஸ்வரி வயது 27. சுப்பிரமணியன் பொக்லைன் இயந்திரம் ஓட்டும் பணியில் இருந்துவருகிறார். அவரது மனைவி அதே கிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக உள்ளார். அந்த குழுவில் இருந்து ரூ.25,000 கடனாக வாங்கி குடும்பத்திற்குச் செலவு செய்துள்ளார். அதற்கான மாதத்தவணை பணத்தை மாதாமாதம் செலுத்த வேண்டும். அப்படி மாதத்தவணை செலுத்த பணம் தருமாறு கணவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், என்னிடம் பணம் இல்லை என்று மறுத்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மகளிர் குழுவில் வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்த முடியாவிட்டால் பலருக்கும் பதில் சொல்ல வேண்டும், அவமானமாகிவிடும் என்ற மனமுடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். 

 

மனமுடைந்த  அவரது மனைவி, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் தானும், தனது 9 வயது மூத்த மகளும் விஷம் அருந்தி உள்ளனர். விஷம் அருந்திய சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி விழுந்தனர். இதனை பார்த்த  அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு குழந்தை கரிஷ்னா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பரமேஸ்வரி கணவர் சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். வாங்கிய கடனை செலுத்த முடியாத கவலையும் வேதனையும் அதனால்  மனமுடைந்து தாயும் மகளும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தது, பெண் குழந்தை உயிரிழந்தது அந்தப் பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்