தமிழகத்தில் திருவிழா, அரசியல், சமூகம், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில், பொதுப் போக்குவரத்தை அத்தியாவசியத்திற்கு மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பொதுமக்கள் பண்டிகைகளை தங்கள் இல்லங்களிலேயே கொண்டாடவேண்டும். கூட்டம் கூடும் இடங்களுக்கு, நிகழ்வுகளுக்கு செல்வதை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். கரோனா மூன்றாம் அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு அறிக்கை அளித்துள்ளது. எனவே செப்டம்பர், அக்டோபரில் மூன்றாம் அலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதனால் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
கரோனா தொற்றின் மூன்றாம் அலையை தடுப்பதற்கு தடுப்பூசியின் பங்கு முக்கியமானது. தினமும் 3 லட்சம் தடுப்பூசி என்ற அளவை தற்போது 5 லட்சம் என அதிகரித்துள்ளோம். சில மாவட்டங்களில் தினசரி பாதிப்பு உயர்ந்து காணப்படுகிறது. நிஃபா வைரஸ் தாக்கம் காரணமாக கேரளா உடனான பேருந்து போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்படுகிறது. தமிழகத்தில் நிஃபா வைரஸ் தாக்கம் ஏற்படாதவாறு மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். அதேபோல் அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31-ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி வளாகங்களில் நோய்த்தடுப்பு பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.