கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. 150 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவ சிகிச்சை மையத்தில் தற்போது 80 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இன்று காலை இட்லி உணவு வழங்கப்பட்டது. அதில் ஒருவரது இட்லி பொட்டலத்தில் பல்லி இருந்ததால், அதனைப் பார்த்த நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தவர்கள், உணவைச் சாப்பிட மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதையடுத்து அங்கு விரைந்து சென்ற மருத்துவமனை அதிகாரி மருத்துவர் செந்தில்குமார், வட்டாட்சியர் செல்வகுமார், கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், துணைக் காவல் கண்காணிப்பாளர் சாந்தி உள்ளிட்டோர் விசாரணை செய்ததுடன் நோயாளிகளிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், நோயாளிகளுக்கு உணவு வழங்கும் ஒப்பந்ததாரரை அழைத்து நோயாளிகளுக்குத் தரமான உணவு வழங்க வேண்டும் என்று எச்சரித்தனர். அதன் பின்னர் நோயாளிகள் போராட்டத்தைக் கைவிட்டதால் 11 மணிக்கு மேல் மீண்டும் உணவு மற்றும் மூலிகை குடிநீர் வழங்கப்பட்டன.
கரோனா சிகிச்சை மையத்தில் வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்த சம்பவம் கடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.