திருப்பத்தூரில் செயல்பட்டுவரும் அங்கன்வாடி ஒன்றில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்ததாகக் கூறப்படும் நிலையில், உணவினை சாப்பிட்ட 13 குழந்தைகள் ஆம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது சோமலாபுரம். இங்கு செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்றுவருகின்றனர். நேற்று (16.11.2021) 14க்கும் மேற்பட்ட குழந்தைகள் அந்த அங்கன்வாடி மையத்திற்குச் சென்றுள்ளனர். அங்கன்வாடி ஆசிரியர் அஞ்சலி என்பவர் குழந்தைகளுக்குப் பாடம் நடத்திய பின்னர், மல்லிகா என்ற சமையலர் சத்துணவைப் பரிமாறியுள்ளார்.
குழந்தைகளின் வீடுகள் அருகிலேயே இருப்பதால், உணவு நேரத்தின்போது பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அவர்களாகவே அங்கன்வாடி மையத்தில் கொடுக்கப்படும் உணவைக் குழந்தைகளுக்கு ஊட்டிவிட்டுச் செல்வது வழக்கம். அதன்படி 13 குழந்தைகளின் பெற்றோர்கள் அங்கன்வாடி மையத்திற்கு வந்து கொடுக்கப்பட்ட சத்துணவைக் குழந்தைகளுக்கு ஊட்டியுள்ளனர். அப்போது ஒரு குழந்தையின் தாய், கொடுக்கப்பட்ட சத்துணவைக் குழந்தைக்கு ஊட்டும்போது அதில் பல்லி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து அவர் அங்கன்வாடி மைய ஆசிரியர் அஞ்சலியிடமும், சமையலர் மல்லிகாவிடமும் தகவல் தெரிவித்த நிலையில், அங்கு ஒரு குழந்தை மயங்கி விழுந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ந்த அனைவரும் குழந்தைகளை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
தற்போதுவரை சிகிச்சையில் இருக்கும் 13 குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சத்துணவில் பல்லி இருந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.டி.ஓ. காயத்ரி சுப்பிரமணி அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அங்கன்வாடி திட்ட இயக்குநர் கோமதியும் குழந்தைகள் உடல்நலம் குறித்து ஆய்வு மேற்கொண்டு விசாரித்துவருகிறார்.