Skip to main content

எழுத்தாளுமைகள் சங்கமித்துள்ள இலக்கிய திருவிழா....!

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் என்கிற அந்த சிறிய நகரத்தில் தமிழக இலக்கிய ஆளுமைகள் சங்கமித்துள்ள பண்பாட்டு திருவிழா தொடங்கியிருக்கிறது. ஆம், தமிழர்களின் அரசியல், ஆய்வு, மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு, தத்துவம், வாழ்வியல் கூறுகள் அணைத்திற்கும் கருத்தாளுமிக்க, தமிழோடு ஒன்றர கலந்த ஒரு வழிகாட்டி அமைப்புதான் "தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" பொதுவுடமை இயக்க தலைவர்களில் ஒருவராகவும் அறிஞர் பெருமக்களால் இன்றளவும் "இலக்கிய பேராசான்" என அழைக்கப்படும் ப.ஜீவானந்தம் அவர்களால் 1961ம் வருடம் தொடங்கப்பட்டது தான் இந்த பெருமன்றம். 

 

ஜெயகாந்தன், நா.வானமாமலை, தனுஷ்கோடி ராமசாமி, கவிஞர் ஹெச், ஜி.ரசூல் என  இந்த குடிலில் வளர்ந்த ஆளுமைகள் வரிசை ஏராளம். அப்படி ஜீவாவனந்தத்தால் தொடங்கப்பட்ட இந்த அறிவுசார் பெருமன்றத்தின் 60ஆம் ஆண்டு மற்றும் 12வது மாநில மாநாடுதான் 20ந் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. 20, 21, 22 என மூன்று நாட்கள் இம் மாநாடு நடைபெற உள்ளது. 20ந் தேதி காலை பறை இசையுடன் தொடங்கப்பட்ட இம்மாநாடு, தொடக்க நிகழ்வில் சி.பி.ஐ. மாநில செயலாளர் முத்தரசன், துணை செயலாளர்கள் திருப்பூர் சுப்பராயன் எம்.பி, மு.வீரபாண்டியன், தி.மு.க. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ.ஆர். ராமச்சந்திரன், காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ், த.மு.எ.ச. பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சன்யா, பெருமன்ற பொதுச் செயலாளர் பேராசிரியர் இரா.காமராசு உட்பட பலரும் கலந்து கொண்டனர். 


தொடர்ந்து மூன்று நாட்களும் கவியரங்கம், கருத்தரங்கம், ஆய்வரங்கம், திறனாய்வு, இந்திய அரசியல், உலக அரசியல் மற்றும் பண்பாட்டு தாக்கங்கள், சுற்றுச்சூழல், அறிவியல், விஞ்ஞானம், மார்க்சியத்தின் அடுத்த கட்டம், பண்பாட்டு தளம் செய்ய வேண்டியது என ஏராளமான தலைப்புகளில் அந்தந்த துறை சார்ந்த தமிழ் நாட்டின் அறிவு சார்ந்த ஆளுமைகள், படைப்பாளிகள் கலந்து கொண்டு திறனாய்வு மற்றும் ஆய்வு உரைகளை, கட்டுரைகளை வாசிக்க உள்ளனர். அதே துறைகளில் வல்லுனர்களாக உள்ளவர்கள் மதிப்பீடு உரைகளும் நிகழ்த்த உள்ளனர். 


இதற்கிடையே வெள்ளி, சனி இரு நாட்களும் இரவு முழுக்க கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. பெருமன்றத்தின் தலைவர்களில் ஒருவராக செயல்பட்டவரும், எழுத்தாளர் ஜெயகாந்தனின் கம்பீர தோற்றத்தின் மறு உருவமாக இருந்தவரும், மானுட மதிப்பை தன் இலக்கியத்தால் செதுக்கிய மறைந்த எழுத்தாளர், நாவலாசிரியர், தனுஷ்கோடி ராமசாமி அவர்கள் வாழ்ந்து மறைந்த அதே சாத்தூரில் அவர் நினைவை போற்றும் வகையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பெருமை மிகு மாநாடு சிறப்புடன் நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்