"மாப்பிள்ளை இவர் தான்.! ஆனால் இவர் போட்டிருக்கிற சட்டை என்னுடையது.!" என்கின்ற பிரபலமான சினிமா டயலாக்கிற்கு பொருத்தமானவர் சிவகங்கை சட்டமன்றத் தொகுதியின் ச.ம.உ-வும், காதி மற்றும் கிராமத் தொழில் வாரிய அமைச்சருமான பாஸ்கரன். பெயருக்குத் தான் அவர் அமைச்சர், ஆனால் அமைச்சருக்குண்டான அனைத்து வேலைகளையும் செய்வது அவரின் குடும்பத்தார்களே என்ற பேச்சு இருக்க, அதற்கு ஒத்து ஊதும் வகையில் கள்ளத்தனமான மதுவிற்பனையில் அவரது பெயர் சிக்கிச் சின்னாபின்னமாகியுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், தமிழ்நாட்டில் மதுவிற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டது. இருப்பினும், ஆளுங்கட்சியினர் டாஸ்மாக் கடையின் சூப்பர்வைசர்களுடன் சேர்ந்து மதுவைத் திருடி வெளி சந்தையில் விற்று கொள்ளை லாபம் பார்த்துவந்தனர்.
ஊரடங்கு தளர்வு தேதிகள் மாறி மாறி அறிவிக்கப்பட, ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலுள்ள மது பாட்டில்களை எடுத்து, மொத்தமாக ஓரிடத்தில் பாதுகாப்பாக வைக்க முடிவெடுக்கப்பட்டு சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் தொடக்கத்தில் 38 கிராமப்புற கடைகள் காலி செய்யப்பட்டு மாவட்ட டாஸ்மாக் குடோனுக்குக் கொண்டு வரப்பட்டது.
அதன் பின் சமீபத்தில் 23- ஆம் தேதியன்று, நகரிலுள்ள அனைத்து மதுக் கடைகளையும் காலி செய்து, நகரின் முக்கிய இடத்தில் வைப்பதென தீர்மானிக்கப்பட்டு நகரிலுள்ள மதுக்கடைகளின் இருப்புகளைச் சேகரித்து பொதுவான இடத்தில் பாதுகாப்பாக வைத்தனர் டாஸ்மாக் டீம்.
சிவகங்கையைப் பொறுத்தவரை மரகக்டை, காந்திரோடு, நேருபஜார், ரோஸ்நகர், ரயில்வே ரோடு, பேருந்து நிலையம், காமராஜர் காலனி மற்றும் முந்திரிக்காடு பகுதிகளிலுள்ள டாஸ்மாக் கடைகளின் இருப்புகளைச் சேகரம் செய்து நகரில் டவுன் காவல் நிலையம் அருகிலுள்ள தனியாருக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் வைத்தனர். எனினும் தமறாக்கிப் பகுதியில் கள்ளத்தனமாக மதுவிற்பனை நடைபெற்று வர, அமைச்சரின் கைங்கரியம் இல்லாமல் இருக்குமோ.? என விவகாரம் பெரிதாகியுள்ளது.
"அமைச்சரோட தமறாக்கி ஊருக்குப் போற வழியில் தான் காமராஜர் காலனி டாஸ்மாக் கடை இருக்கு.. கடை காலி செய்யப்படுவதற்கு முன்னால் மட்டுமல்ல, ஊரடங்கு அமலுக்கு வந்த நாள்முதலே அந்தக் கடையோட சாவி அமைச்சர் தரப்பு மற்றும் உறவினர்களிடம் தான் இருந்துச்சு. ஊரடங்கு காலமான இப்போது கூட 24 மணி நேரமும் இங்கு சரக்கு கிடைக்குது. சரக்கின் ரேட் மட்டும் அதிகம். சரக்கு கிடைத்தால் போதும் என நினைக்கிறவன் பணத்தைப் பார்க்கமாட்டான். 110- ரூபாய் குவாட்டர் இப்ப 550 ருபாய்..! தமறாக்கி, இடையமேலூர் பகுதியில் சர்வசாதாரணமாக கிடைக்குது. அமைச்சர் தரப்பு என்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை தயங்குகிறது." என்கிறார் திமுக-வின் ந.செ.வான துரை ஆனந்த்.
டாஸ்மாக் நடத்தியவர்களோ, "பீர், உயர் ரக சரக்கு என அமைச்சர் தரப்பு காலி செய்தது மட்டும் ஏறக்குறைய ரூ15 லட்சத்துக்கும் மேல். நாங்க சம்பாதிக்க வேண்டியது. அமைச்சர் தரப்பே விற்பது எந்த வகையில் நியாயம்..?" என பொறுமுகின்றனர். இதுகுறித்து கருத்தறிய மாவட்ட டாஸ்மாக் மேலாளர் காளிமுத்துவைத் தொடர்புக் கொண்டோம். பதிலில்லை. இதன் உண்மையை விளக்க வேண்டியது அமைச்சரும், காவல்துறையும் மட்டுமே..! விளக்கம் தருவார்களா..?